மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, தெற்காசிய நாடுகள் உட்பட பல்வேறு உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தொடர்ந்து வரும் போர் சூழல் நீடிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஷெல்லி கிட்டில்சன் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷெல்லி கிட்டில்சன் நீண்ட காலமாக ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் போர் சூழல் குறித்து செய்திகளை சேகரித்து வரும் அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர் ஆவார். இந்தக் கடத்தல் சம்பவம் நேற்று (31/03/2026) பாக்தாத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே நிகழ்ந்துள்ளது. நான்கு பேர் கொண்ட கும்பல் ஷெல்லியை வலுக்கட்டாயமாக ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
கடத்தல்காரர்களை ஈராக் பாதுகாப்புப் படையினர் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். அப்போது கடத்தல்காரர்களின் ஒரு வாகனம் கவிழ்ந்ததில், கடத்தலில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் பத்திரிகையாளர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரை முழுமையாக மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக ஈராக் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா போன்ற ஆயுதக் குழுக்களிடம் இருந்து அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
