அமெரிக்க மண்ணில் ஈரான் அணி * 'பிபா' உலக கோப்பை தொடரில்…

மயாமி: ‘உலக கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்க மண்ணில் விளையாட ஈரான் அனுமதிக்கப்படும்,’ என ‘பிபா’ தெரிவித்துள்ளது.

‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், வரும் ஜூன் 11-ஜூலை 19ல் நடக்க உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆசியாவின் பலம் வாய்ந்த ஈரான் (‘நம்பர்-20’) ‘ஜி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

கடந்த 8 தொடரில் 6வது முறையாக பங்கேற்கும் ஈரான் அணி, நியூசிலாந்து (ஜூன் 15), பெல்ஜியம் (21), எகிப்துடன் (26) மோத உள்ளது. இப்போட்டிகள் அமெரிக்காவில் நடக்க உள்ளன.

தற்போது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்துள்ளன. இதனால், தனது மண்ணில் உலக கோப்பை தொடரில் பங்கேற்க ஈரானுக்கு, அமெரிக்கா அனுமதி தருமா அல்லது அமெரிக்காவுக்கு தனது அணியை ஈரான் அனுப்புமா என சந்தேகம் ஏற்பட்டது. தவிர, ஈரான் ரசிகர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) தலைவர் இன்பான்டினோ பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் இன்பான்டினோ கூறியது:

ஈரான் அணி உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது, அதன் தற்போதைய நிலைமை குறித்து பேசினோம். அப்போது டிரம்ப்,’ அமெரிக்காவில் நடக்கும் தொடரில் பங்கேற்க ஈரான் அணியை வரவேற்கிறோம்,’ என உறுதி தெரிவித்தார்.

எப்போதும் இல்லாத வகையில், மக்களை ஒன்றிணைக்க ‘பிபா’ உலக கோப்பை போன்ற நிகழ்வு நமக்குத் தேவை. டிரம்ப் ஆதரவுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link