அமெரிக்க வரி குறைப்பால் ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும்!

நமது நிருபர்

இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா குறைத்துள்ளதால், அந்நாட்டு சந்தையில் மீண்டும் சமநிலையான போட்டி ஏற்பட்டுள்ளது என ஐடிஎப் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு, கன்வீனர் பிரபு தாமோதரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: அமெரிக்க இறக்குமதி சுங்க வரிகள் குறைக்கப்பட்டதன் மூலம், இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடைத் துறை அமெரிக்க சந்தையில் மீண்டும் சமநிலையான போட்டி நிலைக்கு வந்துள்ளது. முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் நிறைவு பெறும் நிலையில் இருப்பதும், இந்தியாவிலிருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யும் அமெரிக்க நிறுவனங்களின் ஆர்வம் அதிகரிப்பதும், ஏற்றுமதி முன்னேற்றம் தொடர்ந்து மேம்படும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

வளர்ச்சி

2026-27ம் நிதியாண்டு முதல், ஆடை மற்றும் வீட்டு ஜவுளி ஏற்றுமதிகளில் மாதந்தோறும் இரட்டை இலக்க வளர்ச்சி காணப்படும். இதன் மூலம், தற்போதைய 1.27 பில்லியன் டாலர் மாதாந்திர ஏற்றுமதி அளவு, 1.5 பில்லியன் டாலர் என்ற நிலையான அளவாக உடனடியாக உயர வாய்ப்பு உள்ளது. இந்த சமீபத்திய சவால்கள், வெளியில் இருந்து வரும் பிரச்னைகளையும், மந்த காலங்களையும் சமாளிக்கத் தேவையான திறன்களை உருவாக்குவது எவ்வளவு முக்கியம் என்பதைக் தெளிவாக உணர்த்தியுள்ளது.

பாராட்டு

அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை முடிக்க உதவிய இந்திய அரசுக்கும், கடினமான காலத்திலும் ஆதரவு வழங்கிய அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கும் எங்களின் நன்றிகள்.

அதேபோல், தள்ளுபடி விலைகளில் ஏற்றுமதி செய்து, survival exports அணுகுமுறையை பின்பற்றி, தங்கள் நிறுவனங்களையும் இந்தியாவின் ஏற்றுமதி சந்தைப் பங்கையும் பாதுகாத்த இந்திய ஏற்றுமதியாளர்களின் தாங்கும் மனப்பாங்கையும் பாராட்டுகிறோம்.

எதிர்காலத்தில், போட்டித்திறனை தொடர்ந்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, அடுத்த பத்தாண்டுகளில் இரட்டை இலக்க ஏற்றுமதி வளர்ச்சியை உறுதி செய்வதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரபு தாமோதரன் கூறினார்.

Source link