ஆம் ஆத்மீ கட்சியின் பஞ்சாப் மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருபவர் ராகவ் சத்தா. இதனிடையே, ராகவ் சத்தா மாநிலங்களவையின் துணைத் தலைவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று (02-04-26) ஆம் ஆத்மி கட்சி, ராகவ் சத்தாவை அவையின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியது. அவருக்குப் பதிலாகப் பஞ்சாப் நாடாளுமன்ற உறுப்பினரான அசோக் மிட்டலை நியமிக்கக் கோரி மாநிலங்களவைச் செயலகத்திற்கு அறிவுறுத்தியது.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மற்றும் மாநிலங்களவை எம்.பி.யுமான ராகவ் சாத்தா ஆகிய இருவருக்கும் இடையேயான சிக்கலானது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், ராகவ் சாத்தா ஆம் ஆத்மீ கட்சியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து, வீடியோ ஒன்றை இன்று (03-04-26) வெளியிட்டுள்ளார். அதில், “நாடாளுமன்றத்தில் பொதுப் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்புவது ஒரு குற்றமா? நாடாளுமன்றத்தில் எனக்குப் பேச வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நான் பொதுப் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்புகிறேன்.
நான், நாடாளுமன்றத்தில் அரிதாக விவாதிக்கப்படும் தலைப்புகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறேன். மக்களின் பிரச்சினைகளை எழுப்புவதோ அல்லது பொதுப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதோ குற்றமா? நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா? ராகவ் சத்தாவை நாடாளுமன்றத்தில் பேசுவதைத் தடுக்குமாறு ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவைச் செயலகத்திடம் கேட்டுக்கொண்டதால், நான் இன்று இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். தற்போது, நான் அமைதியாக்கப்பட்டுள்ளேனே தவிர, தோற்கடிக்கப்படவில்லை” என்று பேசியுள்ளார்.
இதனிடையே, ராகவ் சத்தாவின் குற்றச்சாட்டுகளை மறுத்த ஆம் ஆத்மீ கட்சியினர், “எங்கள் கட்சியில் பேசுவதற்கு அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது ஒரு ஜனநாயக நடைமுறை. எதிர்காலத்தில் மாநிலங்களவையில் பேசுவதற்கு ராகவ் சத்தாவுக்கும் நேரம் வழங்கப்படும்,” என்று தெரிவித்துள்ளனர்.
