அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்தால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டுமென்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊத்தங்கரை அருகே கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரணகுப்பம் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்துள்ளனர்.
நேற்று காலை இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்தில் திரண்டனர்.
கடந்த வாரம், இப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் மாற்று சமூகத்தினர் பிணத்தைப் புதைத்ததாகவும் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றின் குழாய்களை உடைத்துச் சென்றதாகவும் எழுந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது அம்பேத்கர் சிலை அவமதிப்பு சம்பவம் தேர்தல் நேரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
