‘அம்போ… என விட்ட கமல்; கோவை மக்கள் கொடுத்த பதில் சரிதான்’-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு நேற்று தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 66 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்றும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறி அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக கமல்ஹாசன், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து தனது நிலைப்பாடு குறித்துத் தெரிவித்திருந்தார். அதாவது, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்க முன்வந்ததாகவும், அந்த கொடுக்கப்படும் தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என திமுக கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கமல்ஹாசன் எடுத்திருக்கும் இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசனின் இந்த முடிவை பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானதி ஸ்ரீனிவாசன் பேசுகையில்,  ”கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்தார். 2019 தேர்தலில் அவருடைய கட்சியில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டார்கள். மக்கள் வாக்களித்தார்கள். அவரை நம்பி ஆயிரக்கணக்கான நபர்களும், தொண்டர்களும் தங்கள் பணத்தை போட்டு, நேரத்தைச் செலவு செய்து அவருக்காக உழைத்தார்கள். ஆனால் தன்னுடைய சுயநலத்தின் காரணமாக தான் மட்டும் ராஜ்ய சபா எம்பி ஆகிவிட்டு, அவரை நம்பி கட்சியில் பயணித்த,  கட்சிக்காக உழைத்த அத்தனை பேரையும் அம்போ என்று கைவிட்டு விட்டு சென்றிருக்கிறார். நான் கோவை தெற்கு தொகுதி மக்களை இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். மிகச் சரியான பதிலை அவருக்கு கொடுத்து அனுப்பினார்கள்” என தெரிவித்துள்ளார்.

2021 சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Source link