நேற்று டெல்லியில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் கிட்டத்தட்ட 8 மணிநேரத்திற்குப் பிறகு, எங்கேயும் தரையிறங்காமல் மீண்டும் டெல்லிக்கே திரும்பியிருக்கிறது.
அந்த விமானத்தில் பயணிகளும் இருந்திருக்கிறார்கள்.
ஏன் தரையிறங்கவில்லை?
ஏர் இந்தியாவைச் சேர்ந்த விமானம் AI185 நேற்று காலை 11.34 மணிக்கு கனடாவிற்கு தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறது.
அடுத்த நான்கு மணிநேரத்தில் இந்த விமானம் குன்மிங் அருகே உள்ள சீனாவின் வான்வெளிக்குள் நுழைந்துள்ளது.
அப்போது தான் ஏர் இந்தியா விமான நிலையத்திற்கு ஒரு விஷயம் நியாபகம் வந்துள்ளது. கனடாவிற்குச் செல்ல இந்த விமானத்திற்கு அனுமதி இல்லை என்று.
ஏன் அனுமதி இல்லை?
ஒவ்வொரு விமான நிறுவனங்களுக்கும் நாடுகள் வெவ்வேறு விதமான அனுமதிகளை வழங்கியிருக்கும்.
அதாவது ‘எங்கள் நாட்டிற்கு இந்த வகையான விமானம் தான் நுழைய வேண்டும்…’, ‘இப்படி டெயில் எண் கொண்டிருக்க வேண்டும்…’ என விதிமுறைகள் விதிக்கப்படும்.
அப்படி கனடா நாடு ஏர் இந்தியாவிற்கு கொடுத்துள்ள அனுமதியின் படி, அந்த நாட்டிற்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 777-300ER ரக விமானத்தை மட்டுமே இயக்க முடியும்.
ஆனால், நேற்று சென்றதோ, போயிங் 777-200LR ரக விமானம்.
எரிப்பொருள் வீண்
அதனால், மீண்டும் விமானம் யூ-டர்ன் போட்டு டெல்லியே திரும்பியிருக்கிறது. பின்னர், விமானிகள், விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகள் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டிருக்கின்றனர்.
இன்று இந்தப் பயணிகளைப் போயிங் 777-300ER ரக விமானத்தில் கனடாவிற்கு அனுப்பியுள்ளனர்.
இடையில் பயணிகள் தங்க இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.
நேரம் மட்டும் தான் வீண் என்று பார்த்தால், நேற்று சென்ற போயிங் 777-200LR-க்கு ஒரு மணிநேரத்திற்கு 8 – 9 டன் எரிப்பொருள் தேவைப்படுமாம்.
இப்போது எரிப்பொருள் தட்டுப்பாடு இருக்கும் சூழலில் இப்படியொரு சம்பவம்.
