அரசின் அனுமதிக்கு மாறாக கோவிலுக்கு எதிரில் ஈ.வெ.ரா., சிலை: மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் பாராமுகம்

கோவை: தமிழக அரசின் அனுமதிக்கு மாறாக, கோவை, காந்திபுரம் சந்திப்பில், பிள்ளையார் கோவிலுக்கு எதிரே ஈ.வெ.ரா., சிலை நிறுவி இருப்பதற்கு கண்டனம் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில், மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் பாராமுகமாக இருக்கின்றன.

கோவை, நஞ்சப்பா சாலையில் மேம்பாலம் கட்டிய போது, காந்திபுரம் சந்திப்பில் இருந்த ராஜாஜி, ஈ.வெ.ரா., சிலைகள் அகற்றப்பட்டன.

காந்திபுரம் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் ஸ்டாண்ட் முன், மாநகராட்சிக்குரிய இடத்தில் கட்டியுள்ள பெரியார் படிப்பகம் அருகே, திராவிடர் கழகத்தினர் ஈ.வெ.ரா., சிலையை, 2016ல் வைத்தனர்.

உள்நோக்கம்

சில மாதங்களாக மாநகராட்சி சார்பில், சாலைத்தீவு திடல்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சத்தி சாலை திருப்பத்தில், சந்திரயான் ராக்கெட் மாதிரி நிறுவப்பட்டது. உடனே, காந்திபுரம் பிள்ளையார் கோவிலுக்கு எதிரே இருந்து எடுக்கப்பட்ட ராஜாஜி சிலை இருந்த இடத்தில் ஈ.வெ.ரா., சிலையை தி.க.,வினர் திடீரென நிறுவினர்.

ஏற்கனவே பெற்றிருந்த அனுமதிப்படி, சந்திரயான் ராக்கெட் மாதிரி வைத்துள்ள இடத்தில் தான் சிலையை நிறுவி இருக்க வேண்டும். மாறாக, கோவிலுக்கு எதிரே நிறுவியதில், உள்நோக்கம் இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

இச்சூழலில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலர் ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், ‘அரசாணை எண்: 32, நாள்: 13.02.1998ல் முறையாக அரசு அனுமதி பெற்றே சிலை நிறுவப்பட்டது.

‘நஞ்சப்பா சாலையில் கட்டிய பாலம் பயன்பாட்டுக்கு வந்த பின், ஏற்கனவே சிலை அமைக்க அரசு அனுமதித்த தீவுத்திடலில் நிறுவி இருக்கிறோம்’ என, கூறியுள்ளார். ஆனால், இதுவரை நடந்ததை பார்த்தால் தெரியும். அவர் சொல்வதில் எவ்வளவு உண்மை என்பது. சிலை நிறுவ, 1997 செப்., 24ல், முதல்வரின் தனிப்பிரிவுக்கு, தி.க.,வினர் மனு அனுப்பினர்.

நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, போக்குவரத்து அடிப்படையில், அப்பகுதியில் சிலை அமைக்க இயலாது என, மறுத்து விட்டனர். அதன் பின், சத்தி சாலையில் இருந்து பாரதியார் சாலைக்கு நுழையும் பகுதியில் சிலை நிறுவ, 1998 மே 12ல் மீண்டும் அனுமதி கோரினர். இந்த இடத்தை நெடுஞ்சாலைத்துறை பரிந்துரைத்தது.

சர்ச்சை

கலெக்டரும் அரசுக்கு பரிந்துரைத்ததை தொடர்ந்து, சத்தி சாலை திருப்பத்தில் சிலை நிறுவ அனுமதி தரப்பட்டது. அந்த அனுமதிப்படி சிலை வைக்க வேண்டுமெனில், ராக்கெட் மாதிரி இருக்கும் இடத்தில் தான் நிறுவப்பட்டிருக்க வேண்டும். இந்த உண்மையை மறைத்து, வேண்டுமென்றே பிள்ளையார் கோவிலுக்கு எதிரே தற்போது நிறுவியிருப்பதே சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

சிலையை நிறுவியவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, அனுமதி கொடுத்த இடத்துக்கு மாற்றுவதற்கு, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். ஆனால், தமிழக அரசின் உத்தரவையும், மாநகராட்சி தீர்மானத்தையும், கலெக்டரும், மாநகராட்சி கமிஷனரும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். அரசு துறைகளின் இத்தகைய செயலுக்கு பா.ஜ., ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

‘உடனே அகற்றணும்’

ஹிந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘கடவுள் வெறுப்பு பேசிய ஈ.வெ.ரா., சிலை, கோவிலுக்கு எதிரே இருப்பது பக்தர்களின் மனதை புண்படுத்துகிறது. ராஜாஜி சிலை வேறெங்கும் வைக்கப்படவில்லை. கோவிலுக்கு எதிரே வைத்துள்ள ஈ.வெ.ரா., சிலைக்கு மாநகராட்சியில் முறையாக மீண்டும் அனுமதி பெறாததால், உடனடியாக அகற்ற வேண்டும்’ என, கூறியுள்ளார்.

‘தேசிய அடையாளத்தை அழிக்கும் செயல்’

ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், ‘ராஜாஜி சிலை இருந்த இடத்தில், மீண்டும் ராஜாஜி சிலை அமைத்திருக்கலாம். ஆனால், வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் கோவில் எதிரே திடீரென ஈ.வெ.ரா., சிலை அமைக்கப்பட்டுள்ளது.
‘காந்திபுரம் பகுதியில் ஆன்மிக தேசிய அடையாளத்தை அழிக்கும் வகையில், திராவிட அடையாளங்களை திணிக்கும் வகையில் ஈ.வெ.ரா., சிலை அமைக்கப்பட்டு, நுாலகத்துக்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
‘இதை எதிர்த்து, சட்ட நடவடிக்கை, மக்களை திரட்டி ஜனநாயக அறப்போராட்டம் நடத்தப்படும். ஈ.வெ.ரா., சிலையை அகற்ற வேண்டும்; ராஜாஜி சிலையை நிறுவ வேண்டும்; நுாலகத்துக்கு மகாத்மா காந்தி பெயர் சூட்ட வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்.

‘ஹிந்து விரோத போக்கு அதிகரிப்பு’

பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டுமென, கோவில் எதிரே நிறுவியுள்ள ஈ.வெ.ரா., சிலையை, அங்கிருந்து உடனடியாக அகற்ற வேண்டும். அங்கு சிலை வைக்க அனுமதி அளிக்க முடியுமென்றால், ஏற்கனவே இருந்த ராஜாஜி சிலையை மீண்டும் வைக்க வேண்டும். தி.மு.க., அரசின் ஹிந்து விரோத போக்கின் தீவிரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது’ என, கூறியுள்ளார்.

Source link