நமது டில்லி நிருபர்
‘ அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றவே, அவரை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது’ என, பார்லி.,யில் காங்., சரமாரியாக குற்றஞ்சாட்டியது.
லோக்சபாவில், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை துவக்கி வைத்து, காங்., எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கவுரவ் கோகோய் பேசியதாவது: கடந்த பிப்ரவரியில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எம்.பி.,க்கள் பேச அனுமதிக்கப்படாத சூழல் ஏற்பட்டது. குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேச முயன்ற போது, சபாநாயகர் ஓம் பிர்லா மட்டுமல்ல, அவரால் நியமிக்கப்பட்ட தற்காலிக சபாநாயகர் குழு உறுப்பினர்கள், ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் என, பலரும், 20 முறை குறுக்கீடு செய்தனர்.
ஓம் பிர்லாவின் நடவடிக்கையை வைத்து பார்க்கும் போது, அவர் திட்டமிட்டு குறுக்கீடு செய்வது தெளிவாக தெரிகிறது. ராகுலை ஓம் பிர்லா பேசவே அனுமதிக்கவில்லை.சபாநாயகர் என்பவர், பாரபட்சமற்ற தன்மை உடையவராக இருக்க வேண்டும் என, வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றமே கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் இங்கு, நிலைமை மாறாக உள்ளது. ஓம் பிர்லாவை பதவி நீக்க கோருகிறோம். அதற்கு தான் இந்த விவாதமே.
அப்படியிருக்கையில், சபாநாயகரான அவரை நீக்குவதற்கான தீர்மானத்தின் மீதான நடவடிக்கைகளுக்கு, சபையில் யார் தலைமை தாங்குவது என்பதை முடிவு செய்தது யார்? தற்போது சபையை வழிநடத்தும் ஜகதாம்பிகா பாலை, தலைமை தாங்க நியமித்தது யார்? சபை விதிகளுக்கு முரண் என்பதோடு, அரசியலமைப்பு சட்டத்திற்கு இது முற்றிலும் விரோதமானது.
ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார். அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றவே, அவரை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம் கொண்டு வர வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டது.
வெட்கக் கேடு
சபையின் கண்ணியத்தை காக்க வேண்டுமென்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஓம் பிர்லாவுக்கு தனிப்பட்ட முறையில் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இதற்கு முன், மூன்று முறை சபாநாயகர்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போதெல்லாம், துணை சபாநாயகர் தான் சபையை வழிநடத்தினார்.
ஆனால், நீண்ட காலமாகவே துணை சபாநாயகர் பதவியை மத்திய அரசு காலியாக வைத்துள்ளது. இது சட்ட விரோதமானது. வன்முறை நிகழும் என்பதை அறிந்து, சபைக்கு வர வேண்டாம் என, பிரதமர் மோடியை தடுத்ததாக ஓம் பிர்லா கூறுகிறார்.இதன் மூலம், அவர் நடுநிலை தவறி விட்டார். இவ்வாறு அவர் கூறுவதற்கு என்ன உரிமை உள்ளது? பெண் எம்.பி.,க்கள் குறித்து அவர் குற்றஞ்சாட்டியது வெட்கக்கேடானது. இவ்வாறு அவர் பேசினார்.
