அரசியலமைப்பை மதிக்காதவர் முகமது யூனுஸ்: வங்கதேச அதிபர் குற்றச்சாட்டு

டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசின் ஆலோசகராக பதவியில் இருந்த முகமது யூனுஸ், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றவில்லை என அந்நாட்டு அதிபர் முகமது ஷகாபுதீன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: முகமது யூனுஸ் பதவியில் இருந்த ஒன்றரை ஆண்டுகளில் அவர் என்னிடம் எதுவும் விவாதித்தது இல்லை. எனக்கு எதிராக பல்வேறு சதிகளை வலைகளை அவர் கட்டமைத்தார். நாட்டின் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிரந்தரமாக அழிக்கவும், அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தவும் அவர் முயற்சித்தார்.

அரசியலமைப்பு விதிகளை அவர் பின்பற்றியது கிடையாது. அவர் வெளிநாடு சென்று திரும்பிய பிறகு ஜனாதிபதியை சந்தித்து பயணத்தின் நோக்கங்கள் மற்றும் பலன்களை கூற வேண்டும். ஆனால், முகமது யூனுஸ் 14 முதல் 15 பயணங்கள் சென்றுள்ளார். அது குறித்து அவர் என்னிடம் எதுவும் கூறியது இல்லை. என்னை வநது பார்த்ததும் இல்லை.

மாளிகையில் அடைக்கப்பட்ட கைதியாக கடந்த ஒன்றரை ஆண்டுகளில் என்னை மாற்றினார். கொசாவோ மற்றும் கத்தார் செல்லவிருந்த பயணத்தை அவர் அனுமதிக்க வில்லை. அரசியலைமைப்புக்கு எதிராக ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை எனது பதவியில் நியமிக்க முயன்றனர். ஆனால், அரசியலமைப்புக்கு எதிராக செயல்பட அந்த நீதிபதி மறுத்துவிட்டார்.

நாட்டில் அரசியலமைப்பை பாதுகாக்க ராணுவமும் வங்கதேச மக்கள் கட்சியும் முழு ஆதரவு அளித்தன.இவ்வாறு அவர் கூறினார்.

Source link