தமிழ் வார இதழுக்காக டில்லியில் பணியாற்றிய போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்தன. அதில் மறக்க முடியாத ஒன்று,- அப்போது தேர்தல் ஆணையராக இருந்த நம்ம ஊர் டி.என்.சேஷனை சந்தித்ததுதான். அந்த சமயத்தில் ஒரே ஒருவர்தான் தேர்தல் ஆணையராக இருந்தார். இப்போது போல மூன்று பேர் கிடையாது. சேஷனுக்கு முன்பு வரை தேர்தல் ஆணையம், பத்தோடு பதினொன்றாக, மற்றும் ஒரு அரசாங்க துறையாக இயங்கிக் கொண்டிருந்தது.
சேஷன் வந்த பிறகு நிலைமை மாறியது; அரசியல்வாதிகள் நடுங்க ஆரம்பித்தனர். அதனால்தான் சேஷன் பணியில் இருக்கும்போதே, அப்போதைய காங்கிரஸ் அரசு மேலும் இரண்டு பேரை ஆணையர்களாக நியமித்து சேஷனின் அதிகாரத்தை குறைத்தது. அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம்.
அய்யோ அவரா?
சென்னை சென்றிருந்தபோது, நான் பணியாற்றிய வார இதழ் அலுவலகம் சென்றிருந்தேன். ஆசிரியர் என்னை அழைத்தார். “தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன், நம் இதழுக்கு எழுத ஒத்துக்கொண்டுவிட்டார். அவர் பள்ளிப் பருவத்திலிருந்து தேர்தல் ஆணையர் ஆனது வரை நடந்தவற்றை தொடர் கட்டுரையாக எழுதப் போகிறார். நீதான் அவரைப் போய் பார்த்து அவர் சொல்வதை எழுதி அனுப்ப வேண்டும்,” என்றார், ஆசிரியர்.
எனக்கு அதிர்ச்சி. மிகவும் கோபக்காரர், எடுத்தெறிந்து பேசுபவர், சில சமயம் பைல்களை தூக்கி அடிப்பார் என சேஷனைப் பற்றி சக பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
”சார், அவர் முசுடுன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்… நான் தான் போகணுமா…,” என்றேன், நான்.
“நீங்கள் எதற்கு கவலைப்படுகிறீர்கள்… ஒன்றும் ஆகாது,” என்று சொல்லி என்னை அனுப்பிவிட்டார் ஆசிரியர்.
”இப்படி மாட்டிவிட்டாரே… என்னாகுமோ,” என்கிற கவலையிலேயே டில்லி வந்து சேர்ந்தேன்.
கோபக்குரல்
டில்லி வந்த உடனேயே சேஷனுக்கு போன் செய்யவில்லை. ‘என்ன பதில் சொல்வாரோ’ என்கிற உதறல்தான் காரணம். மனதை திடப்படுத்திக் கொண்டு இரண்டு நாள் கழித்து அவருடைய ஆபீஸுக்கு போன் செய்தேன். அவரே போனை எடுத்தார். ‘ஹலோ…’ என்கிற அந்த கட்டையான குரலைக் கேட்டதும் உள்ளுக்குள் ஒரு நடுக்கம்.
“ஹூ ஈச் திஸ்…டோண்ட் வேஸ்ட் மை டைம்…,” என்ற அந்தக்குரலில் கோபம் தெரிந்தது.
என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். “சொல்லுங்க. என்ன வேணும்…,” என்றார். “எங்கள் ஆசிரியர் உங்களைப் பார்க்கச்சொன்னார். உங்களோட வாழ்க்கை வரலாற்றை தொடர் கட்டுரையா எழுதுவது சம்பந்தமாக உங்களைப் பார்க்கணும்…,” என்றேன். “ஓகே…சாயந்தரமா வீட்டுக்கு வாங்கோ…,” என்று கூறிய வினாடியே, போன் ரிசீவர் டப் என வைக்கும் சத்தம் கேட்டது.
வீட்டில் சந்திப்பு
இந்தியா கேட் அருகே பண்டாரா ரோடு உள்ளது. அங்கு பல பெரிய பங்களாக்கள் உண்டு. எல்லாம் மத்திய அரசு பங்களாக்கள். அமைச்சர்கள், எம்பிக்கள், சீனியர் அதிகாரிகள் இந்த பங்களாக்களில் குடியிருந்தனர். இப்படி ஒரு பங்களாவில் சேஷன் இருந்தார். காவலுக்கு நின்றிருந்த செக்யூரிட்டியிடம் என் பெயரைச் சொன்ன பிறகு உள்ளே சென்றேன். வரவேற்பு அறையில் சோபா போடப்பட்டிருக்க, சேஷன் தரையில் அமர்ந்திருந்தார்.
என்னைப் பார்த்து, ‘உட்காருங்க’ என்றார். அவருக்கு எதிரில் தரையில் உட்கார்ந்தேன். போன் அடிக்க, ரிசீவரை எடுத்ததும், ”ஹூ ஈஸ் ஸ்பீக்கிங்…,” என்றார். எதிர் தரப்பில் என்ன பதில் என தெரியவில்லை. “யு ஆர் ஸ்பீக்கிங் டு த ராங் பர்சன்…,” டமால் என ரிசீவரை வைத்தார். மறுபடியும் போன் அடிக்க… இதே பதில். எனக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏதோ மீடியாக்காரங்க… வேற வேலையில்லை…,” என என்னைப் பார்த்து சொன்னார்.
நிபந்தனைகள்
சேஷனுடைய பள்ளிப் பருவத்திலிருந்து அவர் ஐஏஎஸ் அதிகாரியாக தமிழகத்தில் பணிபுரிந்தது வரை தொடராக வருவதாக ஏற்பாடு. அதைப் பற்றி பேச ஆரம்பித்தேன். ”உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள்…ஒரு டேப் ரிகார்டரோடு வந்துவிடுகிறேன். நீங்கள் சொல்வதை ரிகார்ட் செய்து அதை டைப் செய்து அனுப்பி விடுவேன்,” என ஆரம்பித்தேன்.
“ஓகே. ஆனால் சில கண்டிஷன்கள் உண்டு…,” என்றார், சேஷன். நான் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தேன். ‘வேலையை ஆரம்பித்துவிட்டாரே’ என நினைத்துக் கொண்டேன். ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு அவரே தொடர்ந்தார். “வாரத்தில் 3 நாட்கள் வந்து ரிகார்ட் செய்யுங்கள். என்னைக்கு வரணும்னு நான் சொல்லிவிடுவேன்… ஆனால் நீங்கள் கட்டுரையை என்னிடம் முதலில் காட்ட வேண்டும்.
அதன் பிறகுதான் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். அப்படி காட்டாவிட்டால் இந்த தொடரை நிறுத்திவிடுவேன்…,” என்றார். ‘என்னிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகுதான் பிரசுரம் செய்ய வேண்டும்’ என்பது கடுமையான நிபந்தனை. ‘முடியாது’ என சொன்னால் தொடர் அம்போ… ஆசிரியருக்கு வேறு பதில் சொல்லியாக வேண்டுமே!
“சரி சார்… உங்ககிட்ட காட்டின பிறகே ஆபீஸுக்கு அனுப்புறேன்…,” என்று பதில் சொன்னேன். வேறு வழியில்லை, என்ன செய்வது! அவருடைய பள்ளிப்பருவ போட்டோவெல்லாம் கொடுத்தார்.
“எல்லாம் பத்திரமா திரும்பி வரணும்…,” என்று இன்னொரு கண்டிஷன்! “எப்போ வரலாம்…,” என்று தயக்கத்துடன் கேட்டேன். “நாளைக்கு சாயந்திரம் 5 மணிக்கு வந்திடுங்கோ…,” என்றார்.
சேஷனின் மனைவி பக்கத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்தார். அனைத்து நிபந்தனைகளுக்கும் ஒத்துக் கொண்டு விடைபெற்றேன்.
நிபந்தனைகளை மீறினேன்
மறுநாள் அவருடைய வீட்டிற்கு சென்றேன். தன் பள்ளிப் பருவத்திலிருந்து ஆரம்பித்தார். அவர் சொல்வதையெல்லாம் டேப் ரிகார்டரில் பதிவு செய்து கொண்டேன். வீட்டிற்கு வந்து ரிகார்டரை போட்டு கேட்டுக் கொண்டே தமிழ் டைப்ரைட்டரில் (அப்போது கம்ப்யூட்டர் அவ்வளவு பிரபலம் ஆகவில்லை) டைப் செய்து அலுவலகத்துக்கு அனுப்பினேன்.
சேஷனிடம் காண்பித்திருக்க வேண்டும்… அதைச் செய்யவில்லை. காரணம், அவரிடம் போனால் திரும்ப வர லேட் ஆகும் என்பது தான். தொடரின் முதல் பகுதி வெளியானது. மார்க்கெட்டில் வருவதற்கு முன்பாகவே சேஷனுக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்து விட்டது அலுவலக நிர்வாகம்.
சுமுக உறவு
இப்படி வாரத்தில் மூன்று நாட்கள் அவருடைய வீட்டிற்கு சென்று பேட்டி எடுத்து ரிகார்ட் செய்து வந்தேன். ‘ஏன் பிரசுரம் ஆவதற்கு முன் என்னிடம் கட்டுரையை காட்டவில்லை’ என சேஷன் ஒரு முறை கூட என்னிடம் கேட்கவில்லை. பேட்டி எடுக்கும்போது பல முறை அவருக்கு போன் வரும். ‘யாரிடம் பேசுகிறாய் தெரிகிறதா’ என சத்தம் போட்டு ரிசீவரை நங்கென வைப்பார்.
பல முறை, ‘சேஷன் இங்கு இல்லை… வெளியே போயிருக்கிறார்’ என இவரே போனில் சொல்லிவிடுவார். சில நாட்கள் அவரது வீட்டிலேயே சாப்பிட்டும் இருக்கிறேன். இப்படி ஏறக்குறைய ஐந்து மாதங்களுக்கு மேல் அவருடைய வீட்டிற்கு சென்று பேட்டி எடுத்தேன். ஓராண்டு காலம் வரை சேஷனின் கட்டுரை தொடர் விகடனில் வெளிவந்தது.
விடைபெற்றேன்
எல்லாம் முடிந்து அவரிடம் விடைபெற்றபோது, ‘தேர்தல் கமிஷனரா ஆன பிறகு என்ன நடந்தது என்பதை தனியாக எழுதலாம்… நிறைய விஷயம் இருக்கு…,” என சொன்னார். ஆனால் அது நடக்கவேயில்லை. அவரை பிற்பாடு சந்திக்க எனக்கும் வாய்ப்பு கிடைக்கவேயில்லை. தேர்தல் கமிஷனின் பவர் என்ன என்பதை கமிஷனுக்கே சொன்னவர் சேஷன்!
– அ.வைத்தியநாதன்
அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.

தொடர்புக்கு: va****@*******ar.in
இந்த கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி பிப்.,16ம் தேதி காலை 7:00 மணிக்கு (இந்திய நேரம்) தினமலர் இணையதளத்தில் வெளியாகும்.
