அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உதவ மறுக்கும் போலீஸ்

சென்னை: லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு அதிகாரிகள் மீதான விசாரணைக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒத்துழைக்க மறுத்து வருவதால், 10 ஆண்டுகளுக்கு மேல், பதிவுத்துறை தொடர்பான, 70 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:லஞ்ச புகாரில் சிக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய, அரசிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதி பெற வேண்டும். 120 நாட்களுக்குள் அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை என்றால், அனுமதி தரப்பட்டதாக கருதி, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்யலாம்.

அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய, அரசிடம் இருந்து அனுமதி பெற வேண்டியது இல்லை.லஞ்ச புகார் மற்றும் வழக்கில் சிக்கும் அரசு அதிகாரிகள், பொது மக்களுடன் நேரடி தொடர்பில் இல்லாத பணிகளில் அமர்த்தப்படுவர். அவர்களின் வசிப்பிடத்தில் இருந்து, பல நுாறு கிலோ மீட்டருக்கு பணியிட மாற்றமும் செய்யப்படுவர்.அரசு பணியில் அப்பழுக்கற்ற நேர்மையை கடைபிடிக்காமல், அரசு பணியாளர் நடத்தை விதிகளை மீறியதாக, ‘மெமோ’ தரப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியான விசாரணையும் மேற்கொள்ளப்படும். அதற்கான கூட்டத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரும் பங்கேற்க வேண்டும்.

ஆனால் அவர்கள், துறை ரீதியான விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகின்றனர். இதனால், பதிவு துறையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக, 70 வழக்குகள் கிடப்பில் உள்ளன. துறை ரீதியான விசாரணையை நிறைவு செய்தால் தான், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link