பஞ்சாப் மாநிலத்தின் அரசு பண்டக சாலை கழகத்தின் மேலாளராகப் பணி புரிந்து வந்தவர் “ககன்தீப் சிங் ரன்தவா”. இவர் அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்த வீடியோவில் தான் விஷம் அருந்தியதாகவும், அமைச்சர் புல்லர் தனக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து, அவரது மனைவி அமிர்தரசில் உள்ள ரஞ்சித் அவென்யூ காவல்நிலையத்தில் புல்லர் மீது புகார் அளித்திருந்தார். இதில், “புதிய புதிய பண்டக சாலை அமைப்பதற்கான டெண்டர்களை தனது தந்தைக்கு வழங்கும்படி புல்லர் அழுத்தம் கொடுத்து வந்தார். இதற்கு ரன்தவா ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், கோபமடைந்த புல்லர் ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு வேறொருவருக்கு டெண்டர் வழங்கியதாக ஒப்புக்கொள்ளுமாறு ரன்தவாவை மிரட்டி வந்தார். இதனால் மனமுடைந்த ரன்தவா தற்கொலை செய்துகொண்டார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், புல்லர், அவரது தந்தை சுக்தேவ் சிங் புல்லர் மற்றும் உதவியாளர் தில்பாக் சிங் ஆகிய மூன்று பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இருப்பினும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. இதனால், புல்லர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக்கோரி ஞாயிற்றுக் கிழமையன்று (22-03-26) காங்கிரஸ், பாஜக மற்றும் சிரோமணி அகலி தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதல்வர் பகவத் சிங் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் பாதுகாப்பு காரணம் கருதி அங்கு காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, முதல்வர் பகவத் மான் சிங் அறிவுறுத்தலின்படி போக்குவரத்து மற்றும் சிறைத்துறை அமைச்சர் பதவியைப் புல்லர் ராஜினாமா செய்துள்ளார் எண்பத்து குறிப்பிடத்தக்கது.
