தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் தொடர்பாகப் பொது சுகாதாரத் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கை கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன? விதிகளை மீறினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? முழுப் பின்னணியைப் பார்க்கலாம்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் அரசின் நடவடிக்கைகளைப் பொது வெளியிலோ, ஊடகங்களிலோ, சமூக வலைதளங்களிலோ எதிர்மறையாக விமர்சிக்கக் கூடாது எனப் பொது சுகாதாரத் துறை இயக்குநர் துறை ஊழியர்களுக்குச் சுற்றறிக்கை விடுத்திருக்கிறார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம்
தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது. முதல்வர் விஜய் மாநிலத்தின் 13-வது முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இந்த நிலையில், தமிழகத்தின் அரசியல் வரலாற்றிலும், அரசு நடைமுறை வரலாற்றிலும் பல்வேறு மாற்றங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், அரசு ஊழியர்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களைப் பொதுவெளியில் எதிர்மறையாக விமர்சித்துப் பதிவிடக் கூடாது எனத் திட்டவட்டமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஊழியர் நடத்தை விதிகள் என்ன சொல்கின்றன?
‘அரசு ஊழியர் நடத்தை விதிகள்’ என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், அரசு ஊழியர்கள் அரசின் திட்டங்களை விமர்சித்து ஊடகங்களிலோ, செய்தித்தாள்களிலோ, வானொலியிலோ, தொலைக்காட்சியிலோ, சமூக வலைதளங்களிலோ, மீம்ஸ் உள்ளிட்டவற்றிலோ பதிவிடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வகையில் கருத்துகளை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசை விமர்சிக்கும் தீர்மானங்கள் அல்லது உரைகள் இடம்பெறும் அலுவல் சாராத கூட்டங்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிகளை மீறினால் நடவடிக்கை: எச்சரிக்கை
விதிகளுக்கு மாறாகச் செயல்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் கவனத்தை ஈர்க்குமா?
அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு ஊழியர்கள் செயல்படக் கூடாது எனச் சுற்றறிக்கை வெளியாகியிருப்பது எதிர்க்கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் நாட்களில் இது பிரச்சினையாக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
Source link
