கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய அரசாணையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. எனினும், இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
கரூர் துயர சம்பவத்தில்…கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சியை கைப்பற்றிது. தொடர்ந்து, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதன்படி, உயிரிழந்தவர்களில் 31 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணையை முதலமைச்சர் விஜய் கடந்த 10ஆம் தேதி வழங்கினார். ஆனால், இதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சீனி அகமது உட்பட 3 பேர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.

அரசுப்பணி வழங்க தடை கோரி மனு இந்த மனுக்களில், கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடந்து வருவதாகவும், இந்த சூழலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையை பாதிக்கும் எனவும், இது கரூர் சம்பவத்தின் சாட்சிகளை கலைக்கும் நடவடிக்கை எனவும் தெரிவித்திருந்தனர். மேலும், போட்டித் தேர்வு மற்றும் தகுதி அடிப்படையில் தான் அரசு பணி வழங்கப்பட வேண்டும் எனவும், ஒரு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கினால், விபத்து போன்ற சம்பவங்களில் உயிரிழப்பவர்களும் அரசு வேலை கேட்கும் நிலை ஏற்படும் எனவும் தெரிவித்திருந்ததோடு, சிபிஐ விசாரணை, உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை அரசு வேலை வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அரசின் கொள்கை முடிவு இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தற்காலிக பணியே வழங்க வேண்டும் எனவும், இந்த பணி வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த சூழலில், இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சரியாக கையாளாததால் தான் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், உயிரிழந்த 41 பேர் மீதும் எந்த தவறும் இல்லை எனவும், அவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கியது அரசின் கொள்கை முடிவு எனவும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரத்து செய்யுமாறு வாதம் மேலும், அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டுத் தான் அரசு வேலை வழங்கும் விவகாரத்தில் அரசு செயல்பட்டு உள்ளதாகவும், ஸ்டெர்லைட் விவகாரம், மதுரை கவுன்சிலர் லீலாவதி வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியதோடு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மனுதாரர்கள் தரப்பிலோ, கருணை பணி தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளதாகவும், இந்த வழிகாட்டுதல்களை கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியதில் பின்பற்றவில்லை எனவும், எனவே அரசு பணி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அரசுப்பணி அரசாணை ரத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கருணை பணி வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளதாகவும், இந்த வழிகாட்டுதல்கள் கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கியதில் பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும், அரசு நினைத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு திறன் பயிற்சி வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்த முயற்சிக்கலாம் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சாதாரண பணி தான் வழங்கியதாக கூறுவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்ததோடு, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கி பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுவதாக அதிரடியாக உத்தரவிட்டனர்.

தமிழக அரசு மேல்முறையீடு எனினும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

மேலும், அரசு பணி நியமன ஆணை பெற்றவர்களின் வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அரசு பணி நியமன ஆணை பெற்றவர்களை வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
