புதுடில்லி: நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் தற்போது 20 சதவீதம் வரை நேரடி அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும் நிலையில், இதை 49 சதவீதமாக உயர்த்த, நிதியமைச்சகம் பரிசீலித்து வருவதாக மத்திய நிதி சேவைகள் துறை செயலர் நாகராஜூ தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
பொதுத்துறை வங்கிகளின் மூலதனத்தை பலப்படுத்துவதற்காக, அவற்றில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது. இதுகுறித்து, அமைச்சகங்களுக்கு இடையே பேச்சு நடந்து வருகிறது.
தற்போது அன்னிய முதலீட்டு வரம்பு, பொதுத்துறை வங்கிகளில் 20 சதவீதமாகவும், தனியார் துறை வங்கிகளில் 74 சதவீதமாகவும் உள்ளது.
தனியார் வங்கிகளை பொறுத்தவரை, 49 சதவீதம் வரை முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்கள், தானியங்கி வழிமுறை வாயிலாகவே முதலீடு செய்யலாம். அதற்கு மேல் முதலீடு செய்வதாக இருந்தால், மத்திய அரசின் அனுமதி பெறவேண்டும்.
கடந்த 2020க்கு பின், 12 பொதுத்துறை வங்கிகளிலும், மத்திய அரசுக்கு சொந்தமான பங்குகளின் அளவு குறைக்கப்படவில்லை.
ஆனால், முதலீட்டை திரட்டுவதற்காக சில வங்கிகள் கூடுதல் பங்குகளை வெளியிட்டதால், மத்திய அரசின் வசமுள்ள பங்குகளின் சதவீதத்தில் மாற்றம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐ.டி.பி.ஐ., வங்கியின் பங்கு விற்பனைக்கான ஏல ஒப்பந்த விண்ணப்பங்கள், இம்மாதமோ அல்லது அடுத்த மாதமோ கோரப்படும். இந்தியாவின் பொருளாதாரத்தை வைத்து பார்க்கும்போது, நம் நாட்டுக்கு 3 – 4 மிகப்பெரிய வங்கிகள் தேவை. – நாகராஜூ மத்திய நிதி சேவைகள் துறை செயலர்
