அரிய வகை தாதுக்களை கண்டறிய இந்தியாவுடன் இணையும் ஜப்பான்

புதுடில்லி:ராஜஸ்தானில் உள்ள அரிய வகை தாதுக்களை இந்தியாவுடன் இணைந்து கண்டறிவது குறித்து ஜப்பான் பேசி வருகிறது.

காந்தங்களை தயாரிப்பதற்கு தேவையான அரிய வகை தாதுகளுக்காக சீனாவை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தை குறைக்கும் நோக்கில் ஜப்பான், இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 12.90 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு அரிய வகை தாதுக்களை கொண்ட மூன்று கடின பாறை படிமங்கள் இருப்பதாக சமீபத்தில் அரசு அறிவித்தது. இந்த நிலையில், அந்த படிமங்களில் அரிய வகை கனிமங்களை கூட்டாக கண்டறிவது தொடர்பாக இந்தியாவுடன் ஜப்பான் பேசி வருகிறது.

ஏற்கெனவே, முக்கிய தாதுக்கள் தொடர்பாக இந்தியாவுக்கும் – ஜப்பானுக்கும் இடையே முதல் கட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. இந்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள அரிய வகை கனிம படிமங்களில் ஜப்பான் தற்போது ஆர்வம் காட்டுகிறது. நிபுணர்களை அங்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள கடின பாறை படிமங்களில் இருந்து தாதுக்களை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தற்போது இந்தியாவிடம் இல்லை. எனவே, ஜப்பான் தனது நவீன தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியை இந்தியாவுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு பதிலாக, அப்பகுதியில் கிடைக்கும் தாதுக்களை ஜப்பானுடன் தடையின்றி பகிர்ந்து கொள்ள இந்தியா ஒப்பந்தம் செய்யக்கூடும் என தெரிகிறது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link