அரைகுறையாய் அறிவுலகம் கட்டுமான பணிகள்; ஆய்வில் அதிகாரிகளை துளைத்தெடுத்த முதல்வர்

கோவை: கோவையில் கட்டப்படும் பெரியார் அறிவுலகத்தில் ஒவ்வொரு இடமாக சென்று 40 நிமிடம் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின், கட்டுமான பணி தாமதமாவதற்கான காரணங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கோவை, காந்திபுரத்தில் ரூ.300 கோடியில் ‘பெரியார் அறிவுலகம்’ என்கிற பெயரில் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்படுகிறது. 2024 நவ., 6ல் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நட்டார். அவ்விழாவில் பேசும்போது, ‘2026 ஜனவரியில் திறந்து வைப்பேன்’ என, கூறினார். அதன்படி, கட்டுமானப் பணி முடியவில்லை. ஆய்வு செய்த பொதுப்பணித்றை அமைச்சர் வேலு, ‘பிப்., 28க்குள் கட்டி முடிக்கப்படும்’ என்றார். அதனால், பிப்., 27 திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டது. வேலை இன்னும் முழுமையாக முடியாததால் நேற்று கோவை வந்த முதல்வர், அறிவுலகத்துக்கு நேரில் சென்று ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்தார்.

போலீஸ் மரியாதையை ஏற்ற அவர், ஒவ்வொரு தளத்திலும் என்னென்ன வசதிகள் செய்யப்படுகின்றன என்பது தொடர்பான புகைப்படங்களை பார்வையிட்டார். கோளரங்கத்துக்குள் சென்று 3டி கண்ணாடி அணிந்து வானியல் அதிசயங்களை பார்த்தார். ஆடிட்டோரியத்தை பார்வையிட்ட பின், முதல் தளத்துக்கு எஸ்கலேட்டரில் சென்றார். முதல் தளத்துக்கு செல்லும் முன், எஸ்கலேட்டர் நின்று விட்டது. நடந்து சென்ற அவர், குழந்தைகளுக்கான பிரிவில் காட்சிப்படுத்தியுள்ள அறிவியல் உபகரணங்களின் செயல்பாடுகளை கேட்டறிந்தார். என்னென்ன புத்தகங்கள் வைக்கப் போகிறீர்கள் என கேட்டார். சிறுவர்களுக்காக ஒதுக்கியுள்ள அறைகளின் அளவுகளை பற்றி கேட்ட முதல்வர், திடீரென அளந்து பார்க்கச் சொல்லி, உதவியாளர்களுக்கு அறிவுறுத்தினார். அதைக்கேட்டு அதிகாரிகள் ஆடிப்போயினர். உடனடியாக, டேப் எடுத்து வரப்பட்டு, அந்த அறை அளந்து பார்க்கப்பட்டது.

மெக்கானிக்கல் ஹார்ட், மனித உறுப்புகளை தெரிவிக்கும் டிஜிட்டல் ஸ்கிரீன் போன்றவற்றை பார்வையிட்டார். கீழடி அருங்காட்சியக மாதிரி வைக்கப்பட்டு இருந்தது. முதல்வரின் கேள்விகளுக்கு கலெக்டர் பவன்குமார் பதிலளித்தார்.

அறிவுலகம் மாதிரியை பார்த்த முதல்வர், ‘ஜனவரியில் திறப்பதாக கூறினோம்; ஏன் தாமதமாகிறது. பணிகள் தாமதமாவதற்கான காரணம் என்ன’ என கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘காற்றின் வேகத்துக்கு மேல்தளங்களில் கண்ணாடிகள் பொருத்த முடியவில்லை. விரைந்து முடித்து விடுவோம்’ என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதிலளித்தனர்.

அறிவுலகத்தில் எட்டு தளங்கள் அமைக்க வேண்டும்; இன்னும் பல தளங்களில் வேலை முடியவில்லை. கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் கண்ணாடி பொருத்தும் பணி முழுமை அடையவில்லை. சுற்றுப்பகுதிகளில் ‘பேவர் பிளாக்’ கற்கள் பதிக்கும் பணியும் முடியவில்லை. திட்டமிட்டபடி வேலை முடியாததால், இத்தகைய ஆய்வை முதல்வர் மேற்கொண்டார். இன்னும் வேலை முடியாதது தெரியக்கூடாது என்பதற்காக, புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. மறுபுறத்தில் சுற்றுச்சுவர் போலவே பிளக்ஸ் பேனர் கட்டப்பட்டு இருந்தது. இருப்பினும், அங்கிருந்த இடைவெளி மூலமாக கட்டுமான பணி முடியாததை பார்க்க முடிந்தது.

ஆய்வின் போது, அமைச்சர்கள் மகேஷ், முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பொதுப்பணித்துறை அமைச்சரான வேலு, நேற்று வரவில்லை.

முதல்வருக்கு நன்றி சொன்ன மாணவியர்

கட்சி பணிக்கு பயன்படுத்தும் காரில், அறிவுலகத்துக்கு நேற்று மதியம் 12.20க்கு முதல்வர் வந்தார்; 1.05க்கு கிளம்பினார். 40 நிமிடங்கள் ஆய்வில் ஈடுபட்டார். ‘ஸ்டாலின் தொடரட்டும்… தமிழகம் வளரட்டும்… ‘ என்கிற பாடல், ஒலிபரப்பியபடி, கோவை நகரில் பயணித்தார்.அறிவுலகத்துக்குள் நுழையும் முன், ரோட்டில் காரை நிறுத்திய முதல்வர், கட்சியினரின் வரவேற்பை ஏற்று, பொன்னாடை, புத்தகங்கள், மனுக்களை பெற்றார். அரசு விருந்தினர் மாளிகை வழியாக சுங்கம் சந்திப்பு சென்றபோது, நிர்மலா கல்லுாரி மாணவியர் திரண்டு நின்றிருந்தனர். பேண்டு வாத்திய இசைக்குழுவினர் இசைத்தனர். காரில் இருந்து இறங்கிச் சென்ற முதல்வர், மாணவியரிடம் நலம் விசாரித்தார். இலவச லேப்-டாப்களை சிலர் காட்டி, அவருக்கு நன்றி தெரிவித்தனர். கைகுலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு, அங்கிருந்து புறப்பட்டார்.



சிறுமியின் உடல் உறுப்பு தானம் பெற்றோருக்கு முதல்வர் ஆறுதல்

கோவை மாநகராட்சி, 73வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சோமு(எ)சந்தோஷ். இவரது மகள் வெண்பா, தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். சில தினங்களுக்கு முன், உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், வெண்பாவின் மூளை செயலிழந்ததால், அவரது சிறுநீரகம், கல்லீரல், தோல், கண் உள்ளிட்ட, 7 உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டன.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நேற்று கோவை வந்திருந்த முதல்வர் ஸ்டாலினிடம், இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, சிறுமியின் பெற்றோர் வசிக்கும் ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு முதல்வர் சென்றார். சிறுமியின் தந்தை சந்தோஷ், அவரது மனைவி சுகன்யாவிடம் ஆறுதல் கூறினார்.

சிறுமி வெண்பா மற்றும் அவரது பெற்றோரின் தியாகம் குறித்து, சமூக வலைதளத்திலும் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link