அரையிறுதியில் கோகோ காப்

மயாமி: அமெரிக்காவில், மயாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் மோதினர். இதில் அசத்திய கோகோ காப் 6-3, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு காலிறுதியில் செக்குடியரசின் கரோலினா முசோவா 7-5, 7-6 என கனடாவின் விக்டோரியா எம்போகோவை தோற்கடித்தார்.

கஜகஸ்தான் கலக்கல்

அஸ்தானா: கஜகஸ்தானில் நடந்த நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டியில் கஜஸ்தான், நமீபியா அணிகள் மோதின. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்திய கஜகஸ்தான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கஜகஸ்தான் சார்பில் இவான் ஸ்விரிடோவ் (12வது நிமிடம்), அலிபெக் காஸ்யம் (79வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.

எக்ஸ்டிராஸ்

* ஜப்பானில் நடக்கும் ஏ.டி.பி., சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 7-6, 3-6, 5-10 என, ஜப்பானின் கெய்சி உசிதா, தாய்லாந்தின் மேக்சிமஸ் ஜோன்ஸ் ஜோடியிடம் வீழ்ந்தது.

* டில்லியில், ஹாக்கி இந்தியா சார்பில் விருது வழங்கும் விழா நாளை நடக்கவுள்ளது. இதில், சிறந்த கோல்கீப்பர், சிறந்த இளம் வீரர் (21 வயது) விருதுகளுக்கு, இளம் இந்திய கோல்கீப்பர் பிரின்ஸ் தீப் சிங் 21, பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

* கொச்சியில் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து (2027) தகுதிச் சுற்று போட்டியில் (மார்ச் 31) இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இதற்கான இந்திய அணியின் பயிற்சி முகாமில், நேபாளத்தில் பிறந்த தற்காப்பு வீரர் அப்னீத் பாரதி 27, இணைந்தார்.

* சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில், ‘கேலோ இந்தியா’ பழங்குடியினர் விளையாட்டு முதல் சீசன் நடக்கிறது. முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய கர்நாடகாவுக்கு 5 தங்கம், 2 வெள்ளி கிடைத்தது. நீச்சல் போட்டியில் கர்நாடகாவின் தோனீஷ் (200 மீ., ‘பிரீஸ்டைல்’), மணிகண்டா (100 மீ., ‘பேக்ஸ்டிரோக்’, 50 மீ., ‘பட்டர்பிளை’), மேகஞ்சலி (100 மீ., ‘பேக்ஸ்டிரோக்’) தங்கம் வென்றனர்.

Source link