உலான்பாடர்: ஆசிய குத்துச்சண்டை அரையிறுதிக்கு இந்தியாவின் நிகாத் ஜரீன், பிரியா முன்னேறினர்.
மங்கோலியாவில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நிகாத் ஜரீன், பிலிப்பைன்சின் ஜியான் பாகுஹின் மோதினர். நிகாத் ஜரீனை சமாளிக்க முடியாமல் பிலிப்பைன்ஸ் வீராங்கனை திணறினார். இதனையடுத்து ஆட்டத்தை பாதியில் நிறுத்திய மேட்ச் ரெப்ரி, ‘ஆர்.எஸ்.சி.,’ முறையில் நிகாத் ஜரீன் வெற்றி பெற்றதாக அறிவித்தார். அரையிறுதியில் நிகாத் ஜரீன், பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) தங்கம் கைப்பற்றிய சீனாவின் வு யூவை சந்திக்கிறார்.
பெண்களுக்கான 60 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரியா 4-1 என, சீனாவின் செங்யூ யாங்கை தோற்கடித்தார். பெண்களுக்கான 54 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரீத்தி பவார் 5-0 என, மங்கோலியாவின் முங்குன் டிசெட்செக்கை வீழ்த்தினார். அரையிறுதியில் பிரீத்தி, பாரிஸ் ஒலிம்பிக் (2024), உலக சாம்பியன்ஷிப்பில் (2025) வெண்கலம் வென்ற தென் கொரியாவின் இம் ஏஜியை சந்திக்கிறார்.
ஆண்களுக்கான 70 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தீபக் 1-4 என, ஜோர்டானின் ஜியாத் ஈஷாஷிடம் தோல்வியடைந்தார்.
