அழகர்கோவில்: மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதியில், அர்ச்சகர்கள் தட்டில் விழும் காணிக்கை கோயில் ஊழியர் மூலம் உண்டியலில் செலுத்தப்படுகிறது. இதனால் அர்ச்சகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சன்னதி கதவுகள் முன் வைக்கப்பட்டுள்ள உண்டியல் தரிசனத்திற்கு இடையூறு ஏற்படுவதாக பக்தர்களும் அதிருப்தியில் உள்ளனர்.
அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி பலரின் குலதெய்வமாக உள்ளார். சுவாமிக்கு காணிக்கையை சன்னதி முன்புள்ள படிகள் அல்லது கதவுகளில் பக்தர்கள் சமர்ப்பிப்பது வழக்கம். ‘படிக்கு காசு போடுதல்’ என்பது நேர்த்திக் கடனாக கருதப்படுகிறது.
இந்நிலையில் காணிக்கையை முறைப்படுத்த அறநிலையத்துறை சார்பில் கோயில் நிர்வாகம் 4 உண்டியல்களை சன்னதியின் முன் இருபுறமும் நிறுவியது. அதில் சேரும் காணிக்கை கோயில் மேம்பாட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
விசேஷ, முகூர்த்த நாட்களில் நாள் முழுதும் சன்னதியில் கூட்டம் அலைமோதுவதால் அர்ச்சகர்கள், தங்கள் சொந்த செலவில் உதவியாளர்களை நியமித்து பணியாற்றுகின்றனர். பக்தர்களின் காணிக்கை அவர்களுக்குள் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஒருவாரத்திற்கு முன் நான்கு உண்டியல்களில் ஒன்றை சன்னதி கதவுகள் முன்பாக பக்தர்களுக்கு இடையூறாக கோயில் ஊழியர் ஒருவர் வைத்தார்.
அர்ச்சகர்களின் தட்டில் விருப்பத்துடன் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளை உடனுக்குடன் எடுத்து உண்டியலில் செலுத்தி வருகிறார். இதனால் அர்ச்சகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இடையூறாக வைக்கப்பட்ட உண்டியலால் சன்னதி கதவுகளின் கீழ் உள்ள சுவாமியின் பாதம் மறைப்பதாகவும், தரிசனத்திற்கு இடையூறாக இருப்பதாகவும் பக்தர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோயில் நிர்வாகம் தரப்பு கூறுகையில், ”இச்சன்னதியில் நியமிக்கப்பட்டுள்ள 3 அர்ச்சகர்களுக்கும் சம்பளம் உட்பட படிகள் வழங்கப்படுகின்றன. எனவே தட்டில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை உண்டியலில் செலுத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இடையூறின்றி மாற்று இடத்தில் உண்டியல் வைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்றனர்.
மதுரை நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி கோயிலிலும் இதுபோல் அர்ச்சர்களின் தட்டில் விழும் காணிக்கையை அறநிலையத்துறை பறித்து உண்டியலில் சேர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அந்த நடவடிக்கையை அறநிலையத்துறை கைவிட்டது குறிப்பிடத்தக்கது. அதுபோல் அழகர்கோவிலிலும் செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.
