அறிவிக்கப்படாத எமர்ஜென்சி; குறுந்தொழில் முனைவோர் வேதனை

கோவை: தி.மு.க., ஆட்சியில் கொடுத்த நெருக்கடிகளால் குறுந்தொழில் இனி மெல்ல சாகும் நிலை உருவாகியுள்ளதாக, கோவை கம்ப்ரஸர் உற்பத்தியாளர் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

கோவை கம்ப்ரஸர் உற்பத்தியாளர் சங்க துணைத்தலைவர் கிருத்திகா கூறியதாவது:

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சந்திக்கும் சவால்களை கண்டறிந்து தீர்வளிப்பதற்காக தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரதேவன் தலைமையில் ஒரு குழு அமைத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காலப்போக்கில் குறு சிறு நடுத்தர நிறுவனங்களை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டனர்.

வணிகவரித்துறையினர் எங்களின் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் முடக்கினர். சிறு தவறுக்கு கூட உடனடியாக அபராதம் கட்ட சொல்லி அழுத்தம் கொடுத்தனர். இல்லையென்றால் வண்டியை விடுவிக்க மாட்டோம் என்றனர். சரக்குகள் குறித்த நேரத்தில் போக வேண்டும் என்பதால், நள்ளிரவு அவசர அவசரமாக சென்று அபராதம் கட்டியுள்ளோம்.

தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்படாத, இது போன்ற எமர்ஜென்ஸியால், அழுத்தம் தாங்க முடியாமல் இருவர் இறந்தனர். மின் கட்டண உயர்வுக்கு எதிராக, எட்டு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டோம். கோவையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று லட்சத்து 600 ஜவுளி மில்கள் மூடப்பட்டுள்ளன. சொத்துவரி, குப்பை வரி எல்லாவற்றையும் உயர்த்திவிட்டனர். மூலப்பொருள்கள் விலை உயர்வு பிரச்னை பெரியளவுக்கு உள்ளது. பல இடைத்தரகர்கள் மூலப்பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள். இதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை.

முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பலமுறை வெளிநாடுகள் சென்றார். உள்ளூரில் என்ன பிரச்னை என்பதை அவர் கவனிக்கவில்லை. குறுந்தொழில் இனி மெல்ல சாகும் என்கிற நிலை வந்துள்ளது.

இனியும் இதை நம்பி இருக்க முடியாது என்று பலர் ரியல் எஸ்டேட், ஹோட்டல் துறைகளுக்கு மாறி வருகின்றனர்.

தமிழகத்தில் 35.6 லட்சம் குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. 2.56 கோடி பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டால், வேலை வாய்ப்பு குறைந்து, குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Source link