புதுடில்லி: யுஜிசி அளித்த புகாரின் பேரில் அல் பலாஹ் பல்கலை துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திக்கை டில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்தாண்டு நவம்பர் 10ம் தேதி செங்கோட்டை அருகே நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காரை இயக்கிய பயங்கரவாதி டாக்டர் உமர் நபி உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் உமர் நபியின் கூட்டாளிகளான சில டாக்டர்கள் உள்பட 10க்கும் மேற்பேட்டோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட டாக்டர்கள் ஹரியானாவின் பரிதாபாத்தில் செயல்படும் அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு என்ஐஏ நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
மாணவர்களிடம் சட்டவிரோதமாக நிதி வசூலித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில், என்ஏஏசி மற்றும் யுஜிசி அங்கீகாரம் இருப்பதாக பொய்யான தகவலை அளித்து, 415 கோடி ரூபாய் முறைகேடாக பெற்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அல் பலாஹ் பல்கலை துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திக்கை கைது செய்தனர். மேலும், 140 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கம் செய்தனர்.
இந்த நிலையில், யுஜிசி அளித்த புகாரின் பேரில் அல் பலாஹ் பல்கலை துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திக்கை டில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மோசடி உள்ளிட்ட இருபிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி அனுமதியளித்துள்ளார்.
