‘அழகிப்போட்டி மேடையில் ஏற்பட்ட அசவுகரியம்’-நொடியில் திருப்பி போட்ட பெண்

அழகிப்போட்டியில் மேடையில் உரையாற்ற சென்ற மாடல் பெண்மணி ஒருவரின் பல் செட் கழண்ட நிலையில் சிறிதும் பதறாமல் சமாளித்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

‘2026 மிஸ் கிராண்ட் தாய்லாந்து’ என்ற தலைப்பில் நடைபெற்ற அழகிப் போட்டியின் சுற்றில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. அழகிப்போட்டியில் தாய்லாந்தின் பல்வேறு மாகாணங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். அந்தவகையில் ‘பதும் தானி’ என்ற மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கமோல்வான் சனாகோ என்ற பெண் போட்டியாளராக கலந்து கொண்டார்.

போட்டியில் கலந்து கொள்வோர் மேடையில் தங்களை அறிமுகப்டுத்திக்கொள்ளும் சுற்று வந்தது. கமோல்வான் சனாகோ மேடையில் தன்னை அறிமுகப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது செயற்கைப் பல் வரிசை வாயிலிருந்து கழன்று விழுந்தது. இந்த சூழல் மிகவும் மோசமானது என்றாலும் கூட அவர் சற்றும் பதற்றமடையவில்லை. மாறாக மிக லாவகமாக அதைத் தன் கையால் பிடித்து, பின்னால் திரும்பிச் சரி செய்துவிட்டு, மீண்டும் சிரித்த முகத்துடன் தனது பேச்சைத் தொடர்ந்தார். செயற்கை பற்கள் என்பது பொதுவாக அழகிப்போட்டிகளில் பற்களை வெண்மையாகவும் வரிசையாகவும் காட்டப் பயன்படுத்தப்படும் தற்காலிக உறைகள் ஆகும்.

அழகிப்போட்டி மேடையில் வெளிப்பட்ட அவரது தன்னம்பிக்கையையும், இக்கட்டான சூழலை அவர் கையாண்ட விதத்தையும் அங்கிருந்த நடுவர்களும் பார்வையாளர்களும் வெகுவாகப் பாராட்டினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Source link