அழிவின் விளிம்பில் நக்சல் இயக்கம்; எதிர்ப்பு நடவடிக்கைக்கு கைமேல் பலன்; முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு போராட்டம்

– நமது சிறப்பு நிருபர் –

நாட்டில், 60 ஆண்டுகளாக அரசுக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை நடத்தி வந்த நக்சல் அமைப்பு, நம் பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கைகளால், தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.

உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த நக்சல்களை, மத்திய – மாநில அரசுகள் வேரோடு அழித்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, நக்சல் அமைப்புக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் 31க்குள், நாட்டிலிருந்து நக்சல்களை முற்றிலும் ஒழிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மறுவாழ்வு

இதன்படி, ‘ஆப்பரேஷன் காகர்’ என்ற சிறப்பு அதிரடி நடவடிக்கையின் கீழ், நக்சல் அமைப்புக்கு எதிராக நம் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.நக்சல் சித்தாந்தத்தை கைவிட்டு திருந்தி வாழ நினைக்கும் நக்சல் அமைப்பினருக்கு மத்திய – மாநில அரசுகள் உதவித்தொகை அளித்து மறுவாழ்வும் அளிக்கின்றன.

தெலுங்கானாவில், நக்சல் அமைப்புக்கு மூளையாகச் செயல்பட்டு வந்த முக்கிய தலைவரான தேவ்ஜி உட்பட நான்கு பேர், சமீபத்தில் போலீசில் சரணடைந்தனர்.தேவ்ஜியின் இந்த முடிவு, நக்சல் அமைப்பின் கட்டமைப்பை நிலைகுலைய செய்துள்ளது. தலைவர்கள், வழிகாட்டல் இல்லாத, சிதைந்த ஒரு அமைப்பாக நக்சல் அமைப்பு தற்போது மாறியுள்ளது.

சில ஆண்டுகளில் மட்டும், தெலுங்கானாவில், 5,865 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்.நாடு முழுதும், 10 ஆண்டுகளில், மத்திய – மாநில படைகளின் ஒருங்கிணைந்த தாக்குதலால், தங்களின் பாதுகாப்பான வனப்பகுதிகளை நக்சல்கள் இழந்து உள்ளனர்.

தற்போது பஸ்தார் காடுகளில் மட்டுமே ஒருசிலர் உள்ளனர். மற்ற இடங்களில் நக்சல்கள் முற்றிலுமாக துடைத்தெறியப்பட்டுள்ளனர். 1,289 நக்சல்கள் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டுஉள்ளனர்.

நக்சல் அமைப்பின் மத்திய மற்றும் மாநில குழுவைச் சேர்ந்த, 131 முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். மொத்தமுள்ள, 16 மத்திய குழு உறுப்பினர்களில், தற்போது மூன்று பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

முக்கிய நிர்வாகியான முப்பளா லட்சுமண ராவ் என்கிற கணபதி உடல்நலக் குறைவால், தெலுங்கானா காவல் துறையின் கண்காணிப்பில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இறுதி அத்தியாயம்

புதிய ஆட்கள் சேராதது, வயதான தலைமை மற்றும் உள்ளூர் மக்களின் ஆதரவு முற்றிலுமாக சரிந்தது போன்றவை நக்சல்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்கள். ஒரு காலத்தில் நக்சல்களுக்கு கிராம மக்கள் உணவும், புகலிடமும் அளித்தனர்.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 60 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த நக்சல் அமைப்பு, தற்போது அதன் இறுதி அத்தியாயத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

எழுச்சியும், வீழ்ச்சியும்

மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி என்ற கிராமத்தில், நிலப்பிரபுக்களுக்கு எதிராக, 1967-ல், சாரு மஜும்தார் தலைமையில் துவங்கிய ஏழை பழங் குடியினரின் கிளர்ச்சியே நக்சல் அமைப்பின் துவக்கம். மாவோ சேதுங்கின் ஆயுதமேந்திய புரட்சி சித்தாந்தத்தை ஏற்ற இந்த அமைப்பு, ‘நக்சலிசம்’ என்று அழைக்கப்பட்டது. 1969ல், மார்க்சிஸ்ட் கம்யூ., லெனினிஸ்ட் என்ற கட்சியை சாரு மஜும்தார் துவக்கினார். கடந்த, 1972ல், அவரது கைது மற்றும் மரணத்தை தொடர்ந்து, அமைப்பு பின்னடைவை சந்தித்தது. 1980-களில், ஆந்திராவில், ‘மக்கள் யுத்தக் குழு’ என்ற பெயரில், இந்த அமைப்பு மீண்டும் புத்துயிர் பெற்றது. கடந்த 2000-க்கு பின், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீஹார், மஹாராஷ்டிரா, ஒடிஷா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திய இந்த அமைப்பு, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியது. தற்போது இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு அழிவை எதிர்கொண்டுள்ளது.

Source link