“அவசர கதியில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது”

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை கடந்த மார்ச் 29ஆம் தேதி திருமாவளவன் அறிவித்தார்.

இதில், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டிருந்து விசிக துணை பொதுச் செயலாளரான ஆளுர் ஷா நவாஸுக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்கவில்லை. கடந்த முறை நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற ஆளுர் ஷா நவாஸ், சட்டமன்றத்திலும் சரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சரி தனது முதிர்ச்சியான பேச்சால் பலரையும் கவர்ந்தார். இந்த சூழ்நிலையில், இந்த முறை அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அது நடக்காமல் போனது.

இதனால் ஆளுர் ஷா நவாஸை விசிகவும் அதன் தலைவர் திருமாவளவனும் புறக்கணித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவானது. மேலும், தனது வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆளுர் ஷா நவாஸும் கட்சி மீதும் திருமாவளவன் மீது அதிருப்தியில் இருப்பதாக யூகங்கள் கிளம்பின. இந்த விவகாரம் கட்சி மட்டத்திலும் இது விவாதப் பொருளாகியது.

இந்த நிலையில், ஆளுர் ஷா நவாஸுக்கு சீட் கொடுக்காதது ஏன் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “நாகப்பட்டினம் தொகுதி நமக்கு கிடைத்திருந்தால் ஷா நவாஸாக தான் இருந்திருப்பார். நான் மாற்று சிந்தனைக்கு போயிருக்க வாய்ப்பில்லை. நாகப்பட்டினம் தொகுதியை ஜவாஹிருல்லாவுக்கு வழங்கிவிட்டார்கள். ஏன் என்று விசாரித்த போது ஷா நவாஸே அந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்ற தகவலை சொன்னார்கள். பிறகு ராயபுரத்தை ஷா நவாஸ் விரும்புகிறார் என்ற தகவல் கிடைத்தது. நான் உடனே ஷா நவாஸுக்காக ராயபுரத்தை டிக் செய்துவிட்டேன்.

திருப்போரூர் தொகுதியில் பாலாஜி மீண்டும் போட்டியிடுகிறார். அதை அப்படியே நான் டிக் அடித்துவிட்டேன். இடையில் ஷா நவாஸ் ராயபுரம் வேண்டாம் என்று சொல்லி பல்லாவரம் கேட்டார். ஆனால் பல்லாவரம் தேமுதிகவுக்கு போய்விட்டது. ஒருவேளை பல்லாவரம் கிடைத்திருந்தால் அது ஷா நவாஸுக்கு போயிருக்கும். ஆனால் பொதுத் தொகுதி இன்னொரு தனித் தொகுதி என்ன என்பதை விரைந்து முடிக்க வேண்டும், நாளைக்கு திமுக வேட்பாளர் பட்டியலை அறிவிக்க வேண்டும்., எனவே இன்றைக்கு யார் என்ன கேட்கிறார்களோ கொடுத்து அனுப்புங்கள் என்று முதல்வரே தலையிட்டு, சொன்னதன் அடிப்படையில் அவசர கதியில் தான் நமக்கு தரவே முடியாது என்று சொன்ன கள்ளக்குறிச்சியை தந்தார்கள்.

அரூர் வேண்டும் என்று வலியுறுத்தி வலியுறுத்தி கேட்ட நிலையில் நமக்கு அரக்கோணத்தை தந்தார்கள். பல்லாவரம் வேண்டும் என்று கேட்ட நிலையில் பன்ரூட்டியை தந்தார்கள். இப்படி கடைசி நிமிடத்தில் முடிவானது. கடைசியாக ஒரு இஸ்லாமியரை போட்டே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. எங்களுக்கு ஒரு பொதுத் தொகுதி, ஆனால் அங்கு இஸ்லாமியரை போட முடியாது. இரண்டு தொகுதியில் ஒரு தொகுதியை இஸ்லாமியரை வழங்குவதை கடமையாக வைத்திருக்கிறோம். அப்படி அங்கு ஷா நவாஸை தான் போட வேண்டும் என்ற முடிவில் இருந்த போது அப்துல் ரஹ்மான் குறுக்கிட்டார். அவர் தன்னுடைய வாய்ப்பை மறுபடியும் மறுபடியும் வலியுறுத்தினார். இதனை ஷா நவாஸிடம் சொல்லிக் கொள்ளலாம். இந்த முறை நாம் அப்துல் ரஹ்மானுக்கு தரலாம் என்று நான் என்னுடைய சுயமான சிந்தனையிலிருந்து எடுத்த முடிவு. அது மேலோட்டமாக பார்த்தால் பிழையாக இருக்கும் என்று நீங்கள் கருதலாம். அது பிழையாக கூட இருக்கட்டும். ஆனால் ஷா நவாஸ், கூடாது அவரை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்டது அல்ல. அப்துல் ரஹ்மானுக்கு ஒரு வாய்ப்பு தருவோம் என்கிற அடிப்படையில் வழங்கப்பட்டது. அவ்வளவுதான். இதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது” என்று கூறினார். 

Source link