கரூர்,
ஆடி மாத அஷ்டமி தினத்தை முன்னிட்டு கோவில்களில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
கரூர் மாவட்டம் நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர், மேகபாலீஸ்வரர், பாகவல்லி அம்பிகை மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாயகி உடனுறை புன்னைவனநாதர் கோவிலில் உள்ள காலபைரவர், குந்தாணி பாளையம் நத்தமேட்டில் ஈஸ்வரன் கோவிலில் உள்ள கால பைரவர், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவிலில் உள்ள காலபைரவர் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதி சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சொர்ண பைரவர் கோவில்
தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவிலில் சுவாமிக்கு புனிதநீரால் நீரால் நீராட்டப்பட்டு, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து செம்பருத்தி பூக்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற வஸ்திரம் உடுத்தி, பூக்களால் அலங்காரம் செய்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்கள் தாங்கள் அணியிருந்த, தங்க செயின், மோதிரம், வளையல்கள், வாகன சாவிகள், அலுவலக பணப்பெட்டி சாவிகள் ஆகியவற்றை பூஜைக்காக கொடுத்து பெற்றுக் கொண்டனர்.
மண்மங்கலம் மணிகண்டேஸ்வர் கோவில் உள்ள பைரவருக்கு பக்தர்கள் எள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மேலும் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள பைவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
