தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்கம் மற்றும் புதுவை ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி (23.04.2026) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை இன்று (23.03.2026) மாலை நடைபெற உள்ளது.
இதற்காகத் தமிழக பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று காலை 10 மணியளவில் சென்னைக்கு வருகை தந்தார். இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் நோக்கில் பியூஷ் கோயல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான ‘எம்.ஜி.ஆர் மாளிகையில்’ அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று ( 23.03.2026) முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பின் போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், “ஊழல் நிறைந்த, திறமையற்ற மற்றும் தமிழர்களுக்கு எதிரான மு.க.ஸ்டாலின் – உதயநிதி ஸ்டாலின் அரசின் முடிவின் ஆரம்பத்தை நாம் இன்று தொடங்கும்போது, தமிழ்நாட்டில் இருப்பதில் நான் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் இ.பி.எஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்து இன்று முடிவெடுக்கும். தமிழகத்தின் பொருளாதாரத்தை மிக மோசமாக நிர்வகித்து, மாநிலத்தைக் கடினமான காலத்திற்குத் தள்ளிய தீய சக்தியான தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிரான நமது போராட்டத்தை நாங்கள் தொடங்குவோம். தி.மு.க – காங்கிரஸ் அரசால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். மகாராஷ்டிரா, ஹரியானா, பீகார் அல்லது டெல்லி எனத் தேர்தல் மேல் தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நாடு முழுவதும் தோற்கடிக்கப்பட்டது போலவே இங்கும் நடக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
