புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆட்டம் பாட்டத்துடன் பிரசாரம் நடக்கிறது. அந்த வகையில் பொன்னமராவதி வட்டார வளமையத்தில், சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்றுநராக பணியில் இருந்து மாற்றுப் பணியில் விராலிமலைக்கு வந்துள்ள சிறப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கான பயிற்றுநராக உள்ள பகல் நேர பாதுகாப்பு மைய சிறப்பு ஆசிரியர் ராஜேஷ்கண்ணன், அ.தி.மு.க வேட்பாளரின் பிரசார பயணத்தின் போது கட்சித் துண்டு அணிந்து பெண்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ ஆதாரத்துடன் திமுக வினர் தேர்தல் பார்வையாளரிடம் புகார் கொடுத்திருந்தனர். மேலும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலான நிலையில், சிறப்பு ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை அதிகாரிகள் நோட்டிஸ் அனுப்பி இருந்தனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க தேர்தல் பிரசாரத்தில் குத்தாட்டம் போட்ட சிறப்பு ஆசிரியர் ராஜேஷ்கண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
