கோவை: ”வரும் சட்டசபை தேர்தல் தமிழகத்துக்கும், டில்லிக்கும் இடையில் நடக்கும் போர். அதில் தமிழகம் நிச்சயம் வெற்றி பெறும்,” என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
மேற்கு மண்டல தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, கோவை மாவட்டம், கணியூரில் நேற்று நடந்தது. துணை முதல்வரும், இளைஞரணி செயலருமான உதயநிதி பங்கேற்று பேசியதாவது:
தமிழகத்தில் எத்தனை பூத்கள் உள்ளன என்பது தெரியாமல் தான் பல கட்சிகள் உள்ளன. ஆனால், தி.மு.க., இளைஞரணிக்கு, 5 லட்சம் நிர்வாகிகள், 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ராணுவம் போல் இளைஞரணி பணியாற்றுகிறது என, முதல்வர் ஸ்டாலின் கூறுவார்.
நீர் நிலைகளை துார்வாரியது, கொரோனா காலத்தில் மக்களை காக்க ஹெல்ப் லைன், சி.ஏ.ஏ., நீட்டுக்கு எதிராக போராட்டம் என, தி.மு.க., இளைஞர் அணியினர் பல பணிகளை செய்து உள்ளனர்.
கட்சியில் பொறுப்புக்கு வரும் முன் இளைஞரணியில் பயிற்சி எடுக்க வேண்டும். முதல்வரும், நானும், இங்குள்ள பல அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பயிற்சி எடுத்துத்தான், இந்த நிலைக்கு வந்திருக்கிறோம்.
பா.ஜ.,வுக்கு எதிராக, ஸ்டாலின் தலைமையில் போர் நடத்த வேண்டும் என, நாட்டில் பல தலைவர்கள் பேச துவங்கியுள்ளனர். வரும் சட்டசபை தேர்தல், தமிழகம் – டில்லி இடையேயான போர். அதில் தமிழகம் நிச்சயம் வெல்லும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதை தடுக்க சிலர் முயன்றனர். முதல்வர், மகளிருக்கு அளித்த 5,000 ரூபாயை உடனடியாக அவர்கள் வங்கியில் இருந்து எடுத்தது, மத்திய அரசின் மீது இருந்த அச்சமே காரணம். அ.தி.மு.க.,வை, பழனிசாமி பா.ஜ.,வுக்கு விற்று விட்டார்.
இளைஞரணியினர் முதலில் வீட்டில் அரசியல் பேசுங்கள். அதன்பின் மக்களிடம் தி.மு.க., அரசின் கொள்கைகள், திட்டங்களை பிரசாரம் செய்யுங்கள். இளைஞரணிக்கு அதிக வாய்ப்பு கொடுங்கள் என முதல்வரிடம் கேட்டுள்ளேன். அவசியம் வாய்ப்பு அளிப்பார். இவ்வாறு அவர் பேசினார்.
