அ ப்பா சென்டிமென்ட் எடுபடாததால், முதல்வர் ஸ்டாலின் தன்னை அண்ணனாக முன்னிறுத்தி, பிரசாரம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியில், முதல்வர் திருமண மண்டபம், முதல்வர் மருந்தகம் உள்ளிட்ட பல திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் துவக்கினார். மகளிர், மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தினார். ‘இந்த திட்டங்களால், இளைய தலைமுறையினர் ஈர்க்கப்பட்டு, என்னை ‘அப்பா’ என்று அழைப்பது ஆனந்தமாக உள்ளது. காலப்போக்கில், என் பொறுப்பில் வேறு யாராவது வருவர்; ஆனால், அப்பா என்ற உறவு மாறாது’ என, முதல்வர் பெருமிதம் தெரிவித்தார்.
‘ முதல்வர் எந்த பகுதிக்கு சென்றாலும், அங்குள்ள மாணவ – மாணவியர், அப்பா என்று உரிமையுடன் அழைக்கின்றனர்’ என, துணை முதல்வர் உதயநிதி கூறினார். முதல்வரை அப்பா என்று அழைப்பதை புகழ்ந்து பிரபலப்படுத்தும் முயற்சியில் அமைச்சர்கள் நேரு, வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் இறங்கினர் .
ஆனால், அது மக்கள், மாணவர்கள், பெண்கள் மத்தியில் எடுபடவில்லை. இந்நிலையில், தமிழக பெண்களிடம் தன்னை அண்ணனாக அடையாளப்படுத்தி கொள்ளும் முயற்சியில், முதல்வர் ஸ்டாலின் இறங்கியுள்ளார்.
பல்வேறு மாவட்டங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், ஒரு அண்ணனாக மகளிர் மேம்பாட்டிற்கு செய்த திட்டங்களை பட்டியலிடுகிறார். பின்னர், தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள 8,000 ரூபாய் கூப்பன் தொடர்பாக பேசுகிறார். அப்போது, ‘இந்த அண்ணன் கொடுக்கும் கூப்பனை வாங்கி, என்ன பொருட்களை, எந்த கடையில் வாங்க வேண்டும் என்று பெண்களே முடிவு செய்து கொள்ளலாம். கணவரிடம் டோக்கனை கொடுக்காதீர்கள்; மீறி கேட்டால், அண்ணன் ஸ்டாலினிடம் சொல்லுங்கள்; அவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என, வாய்க்கு வாய் அண்ணன், அண்ணன் என, முதல்வர் கூறி வருகிறார்.
அப்பா சென்டிமென்ட் எடுபடாததால், அண்ணன் சென்டிமென்டை, முதல்வர் கையில் எடுத்துள்ளதாக, தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.
