தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இத்தகைய சூழலில் தான் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. மற்றும் அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை கடந்த 23ஆம் தேதி (23.03.2026) நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளை கடந்த 25ஆம் தேதி (25.03.2026) அறிவித்தார். அதன்படி அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பெரியகுளம் (தனி), மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம் (தனி), திருச்சிராப்பள்ளி (மேற்கு), சைதாப்பேட்டை, பூந்தமல்லி மற்றும் மடத்துக்குளம் ஆகிய 11 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக இன்று (28.03.2026) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மன்னார்குடி தொகுதியில் காமராஜும், திருவையாறு தொகுதியில் வேலு கார்த்திகேயனும் போட்டியிடுகின்றனர். காரைக்குடி தொகுதியின் வேட்பாளராக தேர்போகி பண்டி அறிவிக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் தொகுதியில் ஞானசேகரனும், நாங்குநேரி தொகுதியில் இசக்கி முத்துவும் களம் காண்கின்றனர்.
மேலும், ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தர்ராஜன், திருச்சி மேற்கு தொகுதியில் தொட்டியம் ராஜசேகரன் மற்றும் சைதாப்பேட்டை தொகுதியில் செந்தமிழன் ஆகியோர் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி தொகுதியில் ஏழுமலையும், மடத்துக்குளம் தொகுதியில் சண்முகவேலுவும் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
