பதும் தானி: ஆசிய கோப்பை கால்பந்து (20 வயது) லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 0-5 என, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
தாய்லாந்தில், 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள், 3 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி, ‘சி’ பிரிவில் சீனதைபே, ஜப்பான், ஆஸ்திரேலிய அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
முதல் போட்டியில் ஜப்பானிடம் தோல்வியடைந்த இந்தியா, 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணி, 0-5 என்ற கணக்கில் தோற்றது. ஆஸ்திரேலியா சார்பில் ஹால்மாரிக் ‘ஹாட்ரிக்’ கோல் (38, 39, 48வது நிமிடம்) அடித்தார்.
தொடர்ச்சியாக 2 போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணியின் ‘நாக்-அவுட்’ சுற்று வாய்ப்பு குறைந்துள்ளது. இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் (ஏப். 8) சீனதைபே அணியை சந்திக்கிறது. இதில் அதிக கோல் வித்தியாசத்தில் வென்றால், மற்ற போட்டிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
