ஆசிய குத்துச்சண்டை: அரையிறுதியில் விஷ்வநாத்

உலான்பாடர்: ஆசிய குத்துச்சண்டை அரையிறுதிக்கு இந்தியாவின் விஷ்வநாத் சுரேஷ், அங்குஷிதா முன்னேறினர்.

மங்கோலியாவில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் விஷ்வநாத் சுரேஷ், ‘நடப்பு உலக சாம்பியன்’, உலகின் ‘நம்பர்-1’ வீரரான கஜகஸ்தானின் சஞ்சார் தாஷ்கென்பாய் மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய விஷ்வநாத், கஜகஸ்தான் வீரரை ‘நாக்-அவுட்’ செய்தார். முடிவில் விஷ்வநாத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

சென்னையை சேர்ந்த விஷ்வநாத் சுரேஷ், இந்திய ராணுவத்தில் ஹவால்தராக பணியாற்றுகிறார். ராணுவ விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் இவர், உலக யூத் (2022), ஆசிய யூத் (2022), ஆசிய சாம்பியன்ஷிப் (22 வயது), பெடரேஷன் கோப்பை (2025) தொடர்களில் தங்கம் வென்றிருந்தார். இந்த ஆண்டு தேசிய சாம்பியன்ஷிப் பைனலில் ரிஷி சிங்கை வீழ்த்தி தங்கம் கைப்பற்றிய இவர், சீனியர் பிரிவு போட்டியில் தனது முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.

ஆண்களுக்கான 65 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஆதித்யா பிரதாப் யாதவ் 0-5 என, உஸ்பெகிஸ்தானின் அப்துல்லோ மடாமினோவிடம் தோல்வியடைந்தார்.

பெண்களுக்கான 65 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அங்குஷிதா போரோ, கஜகஸ்தானின் லாரா யெசென்கெல்டி மோதினர். இதில் அங்குஷிதா 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Source link