பெர்த்: ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது சீசன் நடக்கிறது. பெர்த்தில் நடந்த காலிறுதியில் ஆஸ்திரேலியா, வட கொரியா அணிகள் மோதின. அலானா கென்னடி (9வது நிமிடம்), சாம் கெர் (47வது) கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
சபாஷ் சபலென்கா
இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், டபிள்யு.டி.ஏ., பரிபாஸ் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், பெலாரசின் அரினா சபலென்கா 7-6, 6-4 என, கனடாவின் விக்டோரியா எம்போகோவை வீழ்த்தினார். மற்றொரு காலிறுதியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6-1, 7-6 என அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை தோற்கடித்தார். போலந்தின் இகா ஸ்வியாடெக் 2-6, 6-4, 4-6 என உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவிடம் தோல்வியடைந்தார்.
எக்ஸ்டிராஸ்
* கொல்கட்டாவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார் 4-6, 2-6 என, ஆஸ்திரேலியாவின் பிலிப் செகுலிக்கிடம் தோல்வியடைந்தார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அபினவ் சஞ்ஜீவ் சண்முகம் காயத்தால் பாதியில் விலக, சகவீரர் சித்தார்த் ரவாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
* அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யு.டி.டி.,) 7வது சீசனை, வரும் ஜூலை மாதம் கோவாவில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* கொல்கட்டாவில் இன்று நடக்கவுள்ள ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், கேரளா அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடக்கும் லீக் போட்டியில் பெங்களூரு, மோகன் பகான் அணிகள் விளையாடுகின்றன.
* அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் பொது செயலர் (2010-22) குஷால் தாஸ் 66, உடல்நலக் குறைவால் காலமானார். டில்லியை சேர்ந்த இவர், 2017ல் இந்தியாவில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரை நடத்த முக்கிய பங்கு வகித்தார்.
* மத்திய அரசின் ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் (டி.ஓ.பி.எஸ்.), இந்திய துப்பாக்கி சுடுதல் நட்சத்திரங்களான சாம்ராட் ராணா, சுருச்சி சிங், தடகள வீரர் குல்வீர் சிங், பாரா பாட்மின்டன் வீரர் பிரமோத் பகத் சேர்க்கப்பட்டனர்.
