மணிலா: ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப், ஜூனியர் பிரிவில் இந்திய பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.
பிலிப்பைன்சில் ஆசிய சைக்கிளிங் டிராக் சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்கள் ஜூனியர் ஸ்பிரின்ட் அணிக்கான போட்டியில் இந்தியா சார்பில் ஆபா, நமிதா, தபிதா இடம் பெற்ற அணி பைனலுக்கு முன்னேறியது. இதில் 52.817 வினாடியில் வந்து இரண்டாவது இடம் பிடிக்க, இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
‘சீனியர்’ ஆறுதல்
பெண்கள் ஸ்பிரின்ட் அணிக்கான போட்டியில் இந்தியா சார்பில் செலஸ்டினா, திரியாஷா, கீர்த்தி இடம் பெற்ற அணி களமிறங்கியது. இதன் முதல் சுற்றில் இந்தியா, மலேசியா மோதின. இந்திய அணி 49.525 வினாடியில் வந்து, தேசிய சாதனை படைத்தது. இதற்கு முன் 50.329 வினாடியாக இருந்தது. இருப்பினும் இந்திய அணி இரண்டாவது சுற்று வாய்ப்பை இழந்தது. மலேசிய அணி 48.086 வினாடியில் வந்து, அடுத்து சுற்றுக்கு முன்னேறியது.
பெண்களுக்கான பர்சூட் பிரிவில் இந்தியாவின் ஸ்வஸ்தி, ஹர்ஷிதா, பூஜா, மீனாட்சி இடம் பெற்ற அணி, 4 நிமிடம் 37.645 வினாடி நேரத்தில் வந்து, தேசிய சாதனை படைத்தது.
