சென்னை: ஆசிய சைக்கிளிங் கோப்பையில் 15 தங்கம் உட்பட 39 பதக்கங்கள் வென்றது இந்தியா.
தமிழக சைக்கிள் சங்கம், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில், ‘டிராக்’ ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயம், வண்டலுாரை அடுத்த மேலக்கோட்டையூர் தமிழக உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலையில் உள்ள, எஸ்.டி.ஏ.டி., மைதானத்தில் நடந்தது. 11 நாடுகளைச் சேர்ந்த 70 வீரர், வீராங்கனைகள், இந்தியா சார்பில் 50 பேர் பங்கேற்றனர்.
நேற்று மூன்றாவது, கடைசி நாள் போட்டிகள் நடந்தன. பெண்கள் ‘எலைட்’ கெய்ரின் பிரிவில் இந்தியாவின் திரியாஷா (தங்கம்), கீர்த்தி (வெள்ளி), சரிதா (வெண்கலம்) முதல் 3 இடம் பிடித்தனர்.
200 மீ., பெண்கள் ஜூனியர் ஸ்பிரின்ட் பிரிவில் இந்தியாவின் தபிதா, ஆபா ஸ்ரீமன், தங்கம், வெள்ளி வென்றனர். 200 மீ., பெண்கள் எலைட் பிரிவில் இந்தியாவின் செலஸ்டினா தங்கம், கீர்த்தி வெள்ளி வென்றனர். சரிதாவுக்கு (இந்தியா) வெண்கலம் கிடைத்தது.
ஆண்கள் ‘எலைட்’ பிரிவில் இந்தியாவின் ரோஜித் சிங், டேவிட் பெக்காம், ஆமிர், முதல் 3 இடம் பெற்று, தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
ஒட்டுமொத்தமாக இந்தியா 15 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலம் என 39 பதக்கங்கள் கைப்பற்றி, முதலிடம் பிடித்து, சாம்பியன் ஆனது. இந்தோனேஷியா (5 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம்), கஜகஸ்தான் (4 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம்) அணிகள் அடுத்த இரு இடம் பெற்றன.
