சென்னை,
5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனைகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
15 பதக்கங்கள்
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று (27.10.2026), ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற 13 விளையாட்டு வீரர், வீராங்கனைகளில் 3 தங்க பதக்கங்கள், 5 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 7 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 9 வீரர், வீராங்கனைகள், போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர்களை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது,
முக்கியமான பாடம்
”விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர அரசு தயாராக உள்ளது. பாரா விளையாட்டு வீரர்கள் நமக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கின்றனர். பாரா விளையாட்டு வீரர்களிடமிருந்து விளையாட்டு விடுதி மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் ஒன்று உள்ளது. அது உடலளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
பாரா விளையாட்டு வீரர்கள் குறித்த விழிப்புணர்வு இன்னும் கிராமப்புறங்களை முழுமையாக சென்றடையவில்லை. பாரா விளையாட்டுகளில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றால், அவர்களால் ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் போன்ற சர்வதேச அளவிலான போட்டிகளிலும் சாதிக்க முடியும் என்ற விழிப்புணர்வை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்ல தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
ஒலிம்பிக் சிட்டி
ஒலிம்பிக் சிட்டி அமைக்கப்படும் போது, பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கென தனியாக ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். பாரா விளையாட்டு வீரர்களுக்கு தேவைப்படும் அனைத்து நவீன வசதிகளும் இங்கு அமைக்கப்படவுள்ள பாரா விளையாட்டு அரங்கிலும் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 36 விளையாட்டுகளுக்கான வசதிகளை கொண்ட விளையாட்டு அரங்கை அமைப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
முதல்-அமைச்சர்
முதல்-அமைச்சர் கோப்பை 2026 விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு தொகை வழங்கி சிறப்பிக்கவுள்ளார். பாரா பேட்மிண்டன் போட்டியில் துளசிமதி முருகேசன் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்க பதக்கமும், மகளிர் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் வெள்ளி பதக்கங்களும் வென்று சாதனை படைத்தார். நவீன் சிவகுமார் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்க பதக்கமும், ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றார்.
தமிழ்நாட்டிற்கு பெருமை
பாரா தடகள போட்டியில் சோலைராஜ் தர்மராஜ் ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார். பாரா பேட்மிண்டன் போட்டியில் நித்யா ஸ்ரீ சுமதி சிவன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளி பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றார். பாரா வலுதூக்குதல் போட்டியில் கஸ்தூரி ராஜமணி மகளிர் 67 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
பாரா பேட்மிண்டன் போட்டியில் சிவராஜன் சோலைமலை கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் ஜே. டி. மதன் ஆடவர் ஒற்றையர் மற்றும் ஆடவர் இரட்டையர் பிரிவுகளில் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றார். பாரா பேட்மிண்டன் போட்டியில் மனிஷா ராமதாஸ் கலப்பு இரட்டையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.
பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் பேபி சஹானா மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும், பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில்,தமிழ்நாடு முதல்-அமைச்சரால் ரூ.6.85 கோடி உயரிய ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, இணை முதன்மை செயல் அலுவலர்/மிஷன் ஒலிம்பிக்ஸ் 2036 மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர்/பொது மேலாளர் (நிர்வாகம்) சுமன், பொது மேலாளர் விளையாட்டு சுஜாதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
