கணவன்-மனைவி இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்க்காமல், கோபத்தில் எடுக்கும் ஒரு முடிவு பல குடும்பங்களின் வாழ்க்கையை சிதைத்து வருகிறது. தென்காசியில், திருமணமாகி ஐந்து மாதங்களே ஆன இளம் பெண் கணவரின் கையால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் மங்கம்மா சாலை, சாஸ்தா கோயில் பகுதியைச் சேர்ந்த சக்தி வீரமணிகண்டன் (32), இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். ஆலங்குளம் அருகே ஐந்தாம்கட்டளை பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி (24) என்பவரை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படத் தொடங்கியது. சக்தியின் ஒருசில ஆசைகளை அன்னலட்சுமி நிறைவேற்ற மறுத்ததால், அடிக்கடி வாக்குவாதமும் குடும்ப தகராறும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜூலை 27-ஆம் தேதி அதிகாலை வீட்டின் மொட்டை மாடியில் இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சக்தி, அன்னலட்சுமியை கொலை செய்துள்ளார். சம்பவத்துக்குப் பிறகு, மறுநாள் சக்தி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அன்னலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், சக்தியின் ஒருசில ஆசைகளை மனைவி நிறைவேற்ற மறுத்ததால், இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது தெரியவந்தது. இந்த பிரச்சினை நாளடைவில் அடிக்கடி தகராறாக மாறியுள்ளது. சம்பவத்தன்றும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் சக்தி மனைவியை கொலை செய்தது விசாரணையில் உறுதியானது. திருமணமாகி ஐந்து மாதங்களிலேயே இளம் பெண் உயிரிழந்த இந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read: “உங்க பொண்ணு துடிக்கிறத நீங்களே பாருங்க”… வீடியோ கால் செய்த மருமகன்.. மாமியார் கண்ட அதிர்ச்சி காட்சி!!
