மும்பை: பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவராக நீடிக்க, அகார்கர் ஆர்வமாக உள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் அகார்கர், 48. கடந்த 2023ல் இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது துணிச்சலான அணித் தேர்வு காரணமாக, இந்தியா மூன்று ஐ.சி.சி., கோப்பைகளை வென்றது. 2024, 2026ல் ‘டி-20’ உலக கோப்பை, 2025ல் சாம்பியன்ஸ் டிராபி கைப்பற்றியது. 2023ல் உலக கோப்பை (50 ஓவர்) பைனலுக்கு முன்னேறியது. 2023, 2025ல் ஆசிய கோப்பை வென்றது.
டெஸ்ட், ‘டி-20’ அரங்கில் இருந்து அனுபவ ரோகித் சர்மா, கோலி, ரவிந்திர ஜடேஜா ஓய்வு பெற்றது, கிரிக்கெட்டில் இருந்து அஷ்வின் விடைபெற்றதால் ஏற்பட்ட சவாலை சமாளித்தார். ‘டி-20’ அணி கேப்டனாக சூர்யகுமார், டெஸ்ட், ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக சுப்மன் கில்லை தேர்வு செய்தார். இதில் சூர்யகுமார் தலைமையிலான அணி, சமீபத்தில் ‘டி-20’ உலக கோப்பை வென்று அசத்தியது.
டெஸ்டில் எதிர்பார்த்த அளவுக்கு இந்தியா சோபிக்கவில்லை. சொந்த மண்ணில் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர்களை இழந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற தவறியது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால், தேர்வுக்குழு தலைவராக அகார்கர் செயல்பாடு திருப்தியாகவே உள்ளது. இவரது பதவிக் காலம் வரும் ஜூனில் நிறைவு பெறுகிறது. இதனை 2027ல் நடக்க உலக கோப்பை தொடர் (50 ஓவர்) வரை நீடிக்க வேண்டுமென பி.சி.சி.ஐ.,க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவருக்கு வலுவான போட்டி இல்லாததால், தேர்வுக்குழு தலைவராக தொடர வாய்ப்பு உள்ளது.
