ஸ்ரீவில்லிபுத்துார் : ”கையேந்தி காசு வாங்கி ஓட்டு போடுவதை விட, ஆடு, மாடு வளர்த்து பணம் சம்பாதிக்கலாம்,” என, ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
விருதுநகர் மாவட்டத்தில், தங்கள் கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அவர் பேசியதாவது:காமராஜர் கல்வி நிலையங்களை திறந்தார். அணைகளை கட்டினார். ஆனால், கருணாநிதியோ தமிழகத்தில் சாராயக்கடைகளை திறந்தார். நாம் தமிழர் ஆட்சி ஏற்பட்டால், ஆடு, மாடு மேய்ப்பது அரசாங்க வேலை ஆகிவிடும். ஆடு, மாடு கழுதை பால்களை வைத்து நவீன தொழில்நுட்பத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து பொருளாதாரத்தில், உலகில் தமிழகத்தில் முதன்மை மாநிலம் ஆக்குவேன். அரசுக்கு பல லட்சம் கோடி வருவாய் ஏற்படும்.
ஆடு, மாடு தொழில் மூலம் படிக்காதவர்கள் முதல் பொறியியல் பட்டதாரி வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகும். அதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் பல ஆயிரம் சம்பளம் பெறும். இதனால் இலவசத்திற்கு கையேந்த வேண்டிய நிலை இருக்காது. இலவசமும் தரமாட்டேன்.
குஜராத்தில் ஆடு, மாடு, கழுதைகளை வளர்த்து கோடிஸ்வரர்கள் உருவாகின்றனர். ஆனால், தமிழகத்தில் சாராயம் குடித்து குடிகாரர் ஆகின்றனர். கையேந்தி காசு வாங்கி ஓட்டு போடுவதை விட ஆடு, மாடு வளர்த்து பணம் சம்பாதிக்கலாம். ஜாதி பார்த்து போடும் ஓட்டு எதையும் சாதிக்கவில்லை. மதம் பார்த்து போடும் ஒட்டு மாற்றத்தை உருவாக்கவில்லை. ஜாதி, மதம் கடந்து நம் இனம் காக்கும் நாம் தமிழருக்கு போடு ஓட்டு; நாட்டை மாற்று. இவ்வாறு அவர் பேசினார்.
