மதுரை: ”ஆட்சி, அரசியல், அதிகாரத்துக்கு நடிகர் ரஜினி மயங்கக்கூடியவர் அல்ல,” என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி:
மானாமதுரை இளைஞர் ஆகாஷ், போலீசார் கட்டுப்பாட்டில் இருந்தபோது இறந்துள்ளார். இதில் தொடர்புடைய போலீசார் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்துக்கு, அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
அ.தி.மு.க., – பா.ஜ.,வுடன் விஜய் கட்சி கூட்டணி அமைப்பது, முழு வடிவம் பெறவில்லை. தி.மு.க., கூட்டணிக்கு எதிராக, அவர்கள் வதந்தி பரப்புகின்றனர்.
நடிகர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என தி.மு.க., அவரை விரட்டி விட்டதாக, த.வெ.க., நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கூறுவது கற்பனை.
அரசியல், அதிகாரம், ஆட்சி ஆகியவற்றிற்கு ரஜினி ஆர்வம் காட்டுபவர் அல்ல, மயங்கக்கூடியவரும் அல்ல.
அந்த நிலையிலிருந்து வெளியேறி விட்டார். அவரை, ஆசை காட்டி மயக்கி அரசியலுக்குள் இழுக்க முடியாது.
ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவர் கட்சி துவங்க நினைத்தார்.
ஆனால், அன்றைய அரசியலில் வலதுசாரிகள், சங் பரிவார்களின் தலையீட்டால், அது தனக்கு உகந்தது அல்ல என தீர்க்கதரிசனமாக உணர்ந்து அவர் கைவிட்டு விட்டார் என்பது தான் உண்மை.
அவரை தி.மு.க., அச்சுறுத்தியது என்பதும் அதனால், அவர் பின் வாங்கினார் என்பதும் கற்பனை.
அது ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்துவது. புதிதாக கட்சி ஆரம்பித்த சசிகலா, அரசியல் ரீதியாக என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
