ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்: குறைந்தபட்சமாக ரூ.50 நிர்ணயம் – தமிழக அரசு அறிவிப்பு? – new auto fare structure minimum fare fixed at rs 50 tamil nadu government announcement

தமிழ்நாட்டில் ஆட்டோக்களுக்கான கட்டணம் தொடர்பான புதிய அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. ஆட்டோக்களுக்கான குறைந்தபட்சத் தூரம், கட்டணம், காத்திருப்புக்கான கட்டணம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளுக்கான கட்டணங்களைத் தமிழக அரசு நிர்ணயித்திருக்கிறது.

சென்னை முதல் கோவை வரை

தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெருநகரங்களில், பொதுப் போக்குவரத்தைத் தாண்டி மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் போக்குவரத்து சேவையாக ஆட்டோக்கள் விளங்குகின்றன. ஆனால், ஊபர்,ஓலா, ரேபிடோ உள்ளிட்ட செயலிகள் மூலம் பைக் டாக்ஸி சேவைகள் அறிமுகமான பிறகு, ஆட்டோக்களின் பயன்பாடு குறைந்திருக்கிறது. அதே சமயத்தில், ஆட்டோக்களுக்கான கட்டணம் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது.

மழைக்காலங்களில் சென்னையில் ஐந்து கிலோமீட்டர் பயணத்துக்கு ரூ.400 வரை ஆட்டோ கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. இத்தகைய சூழலில்தான், ஒருங்கிணைக்கப்பட்ட கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு பொதுஅறிவிப்பை வெளியிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ கட்டண விவரங்கள்

அந்த வகையில், குறைந்தபட்சத் தூரமான 1.8 கிலோமீட்டருக்குக் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கூடுதலாகப் பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.25 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காத்திருப்புக் கட்டணமாக ஒரு நிமிடத்துக்கு ரூ.1 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

மலைப்பாதைக் கட்டணம்

அதேபோல், மலைப்பாதையில் பயணிக்கும் ஆட்டோக்களுக்கு அடிப்படைக் கட்டணத்தைவிட 1.2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான அடிப்படைக் கட்டணம் ரூ.60 எனவும், ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும்ரூ.30 கட்டணம் நிர்ணயிக்கப்படும்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர ஆட்டோ கட்டணம்

இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பயணம் செய்யும் ஆட்டோக்களுக்கு, வழக்கமான கட்டணத்தைவிட 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்புப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ஆட்டோ கட்டணங்கள் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்தக் கட்டணங்கள் நடைமுறைக்கு வரும் தேதி மற்றும் அதிகாரப்பூர்வ அரசாணை விவரங்களைத் தமிழ்நாடு அரசின் அறிவிப்புடன் ஒப்பிட்டுச் சரிபார்ப்பது அவசியம்.

Source link