பட மூலாதாரம், Fundación Casa de Alba, Palacio de Liria, Madrid
கட்டுரை தகவல்எழுதியவர், கேத் பவுண்ட்பதவி,
பிரசுரிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
மறுமலர்ச்சிக் காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்த ஓவியரான லாவினியா ஃபோண்டானா, நிர்வாணப் பெண் உருவத்தை வரைந்த முதல் தொழில்முறை பெண் ஓவியர். அவருடைய பல ஓவியங்கள், ஆண் ஓவியர்களின் படைப்புகளைவிட வெளிப்படையாகவே பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்திருந்தன.
இந்த நிர்வாண ஓவியங்கள், பழமைவாதக் கருத்துகளைக் கொண்ட தனது தந்தைக்கு எதிரான கிளர்ச்சியின் வெளிப்பாடா, வணிக நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவா அல்லது அவரது உள்ளார்ந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தடயமா?
முன்னோடியாகத் திகழ்ந்த ஓவியர் லாவினியா ஃபோண்டானாவின் வாழ்க்கையில் இரண்டு பக்கங்கள் இருந்தன. அவற்றில் முதலாவது, 1577ஆம் ஆண்டு அவர் வரைந்த சுய உருவப் படத்தில் வெளிப்படுகிறது.
அந்த ஓவியத்தில், அழகிய ஆடையும் நகைகளும் அணிந்தபடி, ஸ்பினெட் எனப்படும் இசைக்கருவியின் முன் அவர் அமர்ந்திருக்கிறார்.
செல்வச் செழிப்பும், பண்பாடும், நற்பண்புகளும் கொண்ட இளம் இத்தாலிய பெண்ணின் முழுமையான உருவமாக அவர் அதில் காட்சியளிக்கிறார். பின்னணியில் காணப்படும் ஓவியச் சட்டகம், அவர் தேர்ந்தெடுத்த தொழிலைக் குறிக்கும் பெருமைக்குரிய அடையாளமாக உள்ளது.
முதல் பெண் தொழில்முறை ஓவியராகக் கருதப்படும் அவர், உருவப்பட ஓவியராகப் பெரும் வரவேற்பைப் பெற்றார். மேலும், பத்துக்கும் மேற்பட்ட முக்கிய ஓவியங்களை வரைவதற்கான முக்கிய ஒப்பந்தங்களையும் பெற்றார். இத்தகைய சிறப்புமிக்க பணிகளைப் பெறுவதற்குப் பெண்களுக்குத் திறன் இல்லை என்ற கருத்தை அவர் சவால் செய்தார்.
அந்தப் பணிகளைப் பெற்றுக்கொள்வது மட்டுமின்றி, அவற்றைச் சிறப்பாக நிறைவேற்றுவதற்கும் பெண்களால் முடியும் என்பதை அவர் நிரூபித்தார். அவரது வாழ்க்கையின் இரண்டாவது பக்கத்தை, பிரமாண்டமான ஆடை அணியும் நிலையில் மினர்வா (Minerva in the Act of Dressing) என்ற ஓவியத்தில் காணலாம்.
அதில், நுணுக்கமாக எம்பிராய்டரி செய்யப்பட்ட ஆடையை அணியத் தயாராகும் நிர்வாண தெய்வமான மினர்வா, எதிர்பாராதவிதமாகப் பிடிக்கப்பட்டதைப் போலக் காட்சியளிக்கிறார். அந்த ஆடையை இரு கைகளிலும் கவனமாகப் பிடித்தபடி, பார்வையாளரை நோக்கித் திரும்புகிறார். அவரது பார்வையில் ஒரே நேரத்தில் வெட்கமும் பாலியல் உணர்வைத் தூண்டும் குறிப்பும் வெளிப்படுகின்றன.
பட மூலாதாரம், Accademia di San Luca, Rome
படக்குறிப்பு, கடந்த 1577ஆம் ஆண்டு லவினியா ஃபோண்டானா வரைந்த ஒரு சுய உருவப்படத்தில், அந்தக் கலைஞர் தன்னைப் பண்பட்டவராகவும் நற்பண்பு மிக்கவராகவும் சித்தரிக்கிறார்.
இந்த ஓவியம், ஃபோண்டானா இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு, 1613ஆம் ஆண்டில் கார்டினல் சிபியோன் போர்கீஸுக்காக வரையப்பட்டது. இதன் பின்னணியில் ஒரு பெண் இருந்தார் என்ற உண்மை, இந்த ஓவியத்தைக் காண்பவர்களிடம் நிச்சயமாகக் கூடுதல் பரபரப்பையும் கிளர்ச்சி உணர்வையும் ஏற்படுத்தியிருக்கும்.
இதுபோன்ற ஓவியங்களை உருவாக்குவதில் ஃபோண்டானாவுக்கு பெயர் இருந்தது என்ற தகவலும் அதே விளைவை ஏற்படுத்தியிருக்கும். இந்த உண்மையைப் பற்றி நாம் முழுமையாக அறிந்துகொண்டது அண்மைக் காலத்தில்தான்.
கடந்த சில ஆண்டுகளில், ஃபோண்டானாவுக்கு சொந்தமானவை என்று மேலும் பல ஓவியங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை, பெண் நிர்வாண உருவத்தை வரைந்த முதல் பெண் ஓவியர் மட்டுமின்றி, தனது ஆண் சமகால ஓவியர்களின் படைப்புகளை விடவும் துணிச்சலான கருப்பொருள்களைக் கொண்ட பாலுணர்வைத் தூண்டும் ஓவியங்களை வரைந்த முதல் கலைஞராகவும் அவரை வெளிப்படுத்துகின்றன. முதலில் பார்க்கும்போது, ஃபோண்டானாவின் இந்த இரண்டு முரண்பட்ட பக்கங்களும் ஒரே நேரத்தில் இருந்தன என்பது ஆச்சரியமாகத் தோன்றலாம்.
“அவரது சுய உருவப்படங்கள் மிகவும் கண்ணியமானவை. அவரது வாழ்க்கையில் ஒருபோதும் சர்ச்சைக்கான சிறு அறிகுறிகூட இருந்ததில்லை. எனவே, மிகவும் கட்டுப்பாடான, நாணம் மிக்க ஒரு பெண்ணாகவே அவரை நாம் கருதுகிறோம். ஒருவேளை அப்படி இல்லாமலும் இருக்கலாம்” என்கிறார் ஒஸ்லோவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெறும் ‘(பெண்) ஓவியர்’ கண்காட்சியின் காப்பாளர்களில் ஒருவரான பாட்ரிசியா காவாசினி.”
“ஃபோண்டானாவின் சுய உருவப் படமும் மினர்வா ஓவியமும் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இருப்பினும், கலை வரலாற்றாசிரியர் எலிசபெத் கிராப்பர், “பொது வெளியில் சமூக மரியாதையுடன் வாழ்வது, தனிப்பட்ட வாழ்வில் பாலியல் உணர்வுகளும் சிற்றின்பமும் இருப்பதை மறுக்கிறது என்று நாம் கருத வேண்டியதில்லை. நவீன காலத்தின் தொடக்கத்தில் வாழ்ந்த பெண்களைப் பற்றிய நமது புரிதலில் சில சிக்கலான அம்சங்களுக்கும் நாம் இடமளிக்க வேண்டும்” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Galleria Borghese. Photo by Mauro Coen
படக்குறிப்பு, ஆடை அணியத் தயாராகும் நிலையில் பார்வையாளரை உற்றுப் பார்க்கும் நிர்வாண மினர்வா தேவியை ஃபார்ச்சூனா வரைந்தார்.
இந்த ஓவியங்கள் ஃபோண்டானாவின் தனிப்பட்ட விருப்பங்களைப் பிரதிபலிக்கின்றனவா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அவர் புனிதமான மற்றும் மதச்சார்பற்ற ஓவியங்களை வரைவதற்குப் பின்னால் குறிப்பிட்ட வணிக மற்றும் தொழில்முனைவு சார்ந்த காரணங்கள் இருந்ததாக ‘லவினியா ஃபோன்டானா: எரோடிக் பெயின்டிங்ஸ் ‘ (Lavinia Fontana: Erotic Paintings) என்ற நூலின் ஆசிரியர் என்ரிகோ மரியா டால் போஸோலோ கருதுகிறார்.
“எனது கருத்துப்படி, தான் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டவர் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும், தனது ஓவிய அமைப்பில் இருந்த துணிச்சலின் மீது கவனத்தை ஈர்ப்பதற்காகவும் அவர் அவ்வாறு செய்தார்” என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
மறைக்கப்பட்ட வீனஸ்
ஃபோண்டானாவின் ஆரம்பக்கால சிற்றின்ப ஓவியமாக அறியப்படுவது, 1585-90 காலகட்டத்தில் வரையப்பட்ட வீனஸ் அண்ட் கியூபிட் (Venus and Cupid) ஆகும். நிர்வாண வீனஸ் ஓவியம் என்பது கலை உலகில் வழக்கத்திற்கு மாறான கருப்பொருள் அல்ல.
இருப்பினும், ஃபோண்டானா நகைகள், மெல்லிய திரைச் சீலைகள் மற்றும் முத்துகளைப் பயன்படுத்தி, அந்த ஓவியத்தின் சிற்றின்பத் தன்மையை மேலும் அதிகரித்தார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, இசபெல்லா ரூயினி என்ற அடையாளம் காணக்கூடிய பிரபுத்துவப் பெண்ணை வீனஸாக வரைந்தபோதும் இதே பாணியைப் பின்பற்றினார்.
தனிப்பட்ட பார்வைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டு இருக்கக்கூடும் எனக் கருதப்படும் அந்த அரைநீள உருவப்படத்தில், இசபெல்லா/வீனஸ் மிகவும் மெல்லிய, ஒளி ஊடுருவக்கூடிய துணியால் போர்த்தப்பட்டிருக்கிறார். அந்தத் துணி அவரது மார்பகங்களை மறைக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில், ஃப்ளாரன்ஸ் மற்றும் ரோமில் அழகான பெண்களின் உருவப் படங்களுக்காகவே தனித்தனி காட்சிக் கூடங்கள் இருந்தன. அதேவேளையில், ஃபோண்டானாவின் சொந்த ஊரான போலோனியாவில் பெண்களிடையே கடுமையான போட்டி நிலவியது.
“பல கவிஞர்கள் அவர்களைப் பற்றி எழுதினர். அவர்களுக்குத் தரவரிசை அளித்து, அவர்களில் யார் மிகவும் அழகானவர் என்றும் கூறினர். எனவே, பெண் அழகைப் போற்றும் அந்தக் கலாசாரத்தில் இருந்தே இது உருவானது என்று நான் கருதுகிறேன்” என்கிறார் காவாசினி.
பட மூலாதாரம், Musée des Beaux-Arts, Rouen
படக்குறிப்பு, உயர்குலப் பெண்மணியான இசபெல்லா ரூயினி, மெல்லிய காஸ் துணியால் போர்த்தப்பட்ட வீனஸாக ஃபோன்டானாவால் சித்தரிக்கப்பட்டார்.
மூன்று நிர்வாண உயர்குலப் பெண்கள்
இந்த வகையைச் சேர்ந்த ஃபோண்டானாவின் மிகவும் பிரமிக்கத்தக்க படைப்பு, அண்மையில் அவருடையது என அடையாளம் காணப்பட்ட மூன்று நிர்வாணப் பெண்கள் (Three Female Nudes, சுமார் 1600) என்ற ஓவியம்.
இதில், மெல்லிய திரை போன்ற ஆடைகளையும் நுணுக்கமாக வரையப்பட்ட நகைகளையும் மட்டுமே அணிந்துள்ள மூன்று உயர்குலப் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். கிரேக்க புராணத்தில் வரும் பாரிஸ் தீர்ப்புக் கதையால் ஈர்க்கப்பட்டு, அந்தக் காலத்திய சூழலில் வரையப்பட்ட பாரிஸ் தீர்ப்பைச் சித்தரிக்கும் ஓவியமாக இது இருக்கலாம் என்று டால் போஸோலோ கருதுகிறார்.
அந்தக் கதையில், ஹெரா, அப்ரோடைட் அல்லது அதீனா ஆகிய தெய்வங்களில் யார் மிகவும் அழகானவர் என்பதைத் தேர்வு செய்யுமாறு பாரிஸிடம் கேட்கப்படுகிறது. இடதுபுறத்தில் இருக்கும் பெண், இத்தாலியின் மிகவும் அழகான பெண்களில் ஒருவராகக் கருதப்பட்ட கிளீலியா ஃபார்னீஸ் என்று நம்பப்படுகிறது.
அவரும், வலதுபுறத்தில் இருக்கும் அடையாளம் காணப்படாத பெண்ணும், நடுவில் இருக்கும் பெண்ணை வெற்றியாளராகச் சுட்டிக் காட்டுகின்றனர். நடுவில் இருப்பவர் மரியா டி மெடிசி என்று கருதப்படுகிறது.
இந்த ஓவியம் சிலேட்டில் வரையப்பட்டுள்ளதால், அதன் மேற்பரப்பு அதிக ஒளியைப் பிரதிபலிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. எனவே, இந்த ஓவியத்தை வரையச் செய்த, பிற்கால காலத்தைச் சேர்ந்த பாரிஸ் போன்ற நபர், தனது அறையின் தனிமையில் தாம் தேர்ந்தெடுத்த பெண்ணைப் பார்த்தபோது, ஓவியத்தில் தனது உருவத்தையும் பிரதிபலிப்பாகக் கண்டிருக்கக்கூடும்.
பட மூலாதாரம், Private collection
படக்குறிப்பு, ஆபரணங்கள் அணிந்த, நிர்வாணமான மூன்று உயர்குலப் பெண்களைக் காட்டும், 1600 ஆம் ஆண்டைச் சேர்ந்த கண்ணைக் கவரும் ஓவியம், சமீபத்தில்தான் ஃபார்ச்சூனாவால் வரையப்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இத்தகைய ஓவியங்களை வரைவது நிச்சயமாகத் துணிச்சலான செயல். குறிப்பாக, எதிர் சீர்திருத்தக் காலத்தில் போலோக்னாவில் வாழ்ந்த ஒரு பெண்ணைப் பொறுத்தவரை இது மிகவும் துணிச்சலானது. அந்தக் காலத்தில், நகரின் கடுமையான பேராயரான கார்டினல் கேப்ரியேல் பலேயோட்டி, கத்தோலிக்கத் திருச்சபையின் ஒழுக்கநெறி சார்ந்த கட்டுப்பாடுகளை ஓவியக் கலையிலும் விரிவுபடுத்துவதில் ஆர்வமாக இருந்தார்.
ஃபோண்டானாவின் தந்தையும் ஓவியருமான ப்ரோஸ்பெரோ, தனது டிஸ்கோர்சோ டெல்லே பிட்டூரே (Discorso delle pitture) என்ற நூலில், கிறிஸ்தவ ஓவியர் சர்ச்சைக்குரிய கருப்பொருள்களை வரைவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அது பாவமானது என்றும் குறிப்பிட்டார்.
ஆனால், பொருளாதாரம் சார்ந்த காரணங்களுக்காகக் கலைஞர்கள் இத்தகைய படைப்புகளை வரைவதற்கான ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது என்றும், அவற்றை வரையச் சொன்னவர்களிடம் பாவ மன்னிப்பின்போது திருச்சபை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.
அவரது இந்த இரட்டை நிலைப்பாட்டுக்குப் பின்னால் ஒரு காரணம் இருந்திருக்கலாம். தனது மகளுக்குப் பயிற்சியளித்து, வருமானம் ஈட்டக்கூடிய தொழில் வாழ்க்கைக்கு அவரைத் தயார்படுத்தியிருந்தார். ஆனால், பின்னர் அவரே செல்வாக்கை இழந்தபோது, தனது மரணம் வரை மகள் ஈட்டும் வருமானம் முழுவதையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமெனக் கட்டாயப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்தார்.
தந்தைக்கு எதிரான தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், அவர் எல்லைகளைக் கடந்து செயல்பட்டிருக்க முடியுமா?
அழகான பின்புறங்களைக் கொண்ட வீனஸ்
கடந்த 1597ஆம் ஆண்டு ப்ரோஸ்பெரோவின் மரணத்துக்கு முந்தைய ஆண்டுகளிலும், அவரது மறைவுக்குப் பிந்தைய காலத்திலும் ஃபோண்டானாவின் மிகவும் துணிச்சலான ஓவியங்கள் உருவாக்கப்பட்டன என்பது தற்செயலானதாக இருக்க முடியாது.
அந்தக் காலகட்டத்தில், தன் மீதான கட்டுப்பாடுகள் தளர்வதை அவர் உணர்ந்திருக்கலாம். இந்த ஓவியங்களில் மிகவும் துணிச்சலானவை, குறிப்பாகப் பெண்களின் பின்புறப் பகுதியை மையமாகக் கொண்டுள்ளன. இதற்குக் காரணம், வீனஸ் கல்லிபிஜ் (Venus Callipyge) என்ற சிலை மீதான ஆர்வம் மீண்டும் அதிகரித்ததே என்று விளக்கப்படுகிறது.
அழகான பின்புறத்தைக் கொண்ட வீனஸ் என்று பொருள்படும் இந்தப் பெயருடைய ரோமானிய சிலை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தச் சிலையில், வீனஸ் தனது ஆடையைத் துணிச்சலுடன் உயர்த்தி, தனது பின்புறத்தை வெளிப்படுத்துவது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
ஜார்ஜியோனே, டிடியன், வெரோனீஸ் உள்ளிட்ட பல ஆண் ஓவியர்கள் இந்தக் கருப்பொருளைத் தங்கள் படைப்புகளில் கையாண்டிருந்தனர். ஆனால், இந்தக் கலைஞர்கள் “தெய்வத்தின் பின்புறத்தைத் தொடுவது போன்ற காட்சியைச் சித்தரிக்கத் துணியவில்லை” என்கிறார் டால் போஸோலோ.
சுமார் 1594-95 காலகட்டத்தில் ஃபோண்டானா வரைந்த மார்ஸ் அண்ட் வீனஸ் (Mars and Venus) ஓவியத்தில், அவ்வாறு சித்தரித்திருந்தார். லவினியா, சுமார் 1594-95ஆம் ஆண்டில் வரையப்பட்ட தனது மார்ஸ் அண்ட் வீனஸ் (Mars and Venus) ஓவியத்தில், அவ்வாறு சித்தரித்திருந்தார்.
“இந்த எல்லையை ஒரு பெண் ஓவியர் கடந்தார் என்பதை, என் பார்வையில், சுய விளம்பர மதிப்பின் அடிப்படையில் விளக்க முடியும்” என்கிறார் டால் பொசோலோ.
பட மூலாதாரம், Fundación Casa de Alba, Palacio de Liria, Madrid
படக்குறிப்பு, ஃபோண்டானாவின் செவ்வாய் மற்றும் வீனஸ் (c1594-95), வழக்கத்திற்கு மாறாக, புராண ஜோடியை காமத்துடன் இருப்பதாகச் சித்தரிக்கிறது.
கட்டுக்கடங்காத காம வேட்கையைச் சித்தரிக்கும் விதத்தில் இந்த ஓவியம் மிகவும் வியப்பூட்டுவதாக உள்ளது. செவ்வாய்க் கடவுளான மார்ஸ், வீனஸின் பின்புறத்தைப் பிடித்துத் தடவுவதுடன், அவ்வாறு செய்யும்போதே தனது இடுப்புப் பகுதியை அவரை நோக்கித் தள்ளுகிறார்.
மார்ஸின் கேடயத்தில் மேல்நோக்கி நீண்டிருக்கும் கூர்மையான முனையும், வீனஸின் கால்களுக்கு இடையில் சுட்டிக்காட்டும் வாளும், அவர் எந்த அளவுக்குப் பாலுணர்வு தூண்டப்பட்ட நிலையில் இருக்கிறார் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகத்தையும் விட்டு வைக்கவில்லை.
அதேவேளையில், வீனஸ் பார்வையாளரை நோக்கித் திரும்பி, அனைத்தையும் அறிந்தவர் போலப் புன்னகைக்கிறார்.
மறைக்கப்பட்ட பெருந்திரள்
கடந்த 1604ஆம் ஆண்டு, ரோமுக்கு செல்லத் தொடங்கிய பிறகு, ஃபோண்டானா வரைந்த நிர்வாண மினர்வா ஓவியத்திலும் பெண்ணின் பின்புறப் பகுதியே மீண்டும் கவனத்தின் மையமாக உள்ளது. இருப்பினும், அந்தத் தெய்வத்தின் முகமும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், அது ஃபோண்டானாவின் முகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 1605ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு கவிதையின் அடிப்படையில் இந்தக் கருத்து முன்வைக்கப்படுகிறது.
அந்தக் கவிதை, ஓவியக் கலைஞராக ஃபோண்டானாவின் திறமையைப் பாராட்டுவதுடன், நற்பண்பையும் அழகையும் சித்தரிப்பதற்கு அவருக்கு மாதிரி ஒன்று மட்டுமே போதுமானது என்றும், அது அவரேதான் என்றும் குறிப்பிடுகிறது.
“இந்த உருவம் லாவினியாவை போல் இருக்கிறதா இல்லையா என்பது முக்கியமல்ல; பெண்கள் ஓவியர்களாக இருக்கும்போது அடிக்கடி நிகழ்வதைப் போல, அந்த உருவத்துடன் அவர் அடையாளப்படுத்தப்படுகிறார்” என்கிறார் கிராப்பர்.
நேர்த்தியும், கல்வியறிவும், திறமையும் கொண்ட பெண் ஓவியராகவும், அதே வேளையில் சிற்றின்ப ஓவியங்களையும் உருவாக்கியவராகவும் ஃபோண்டானா திகழ்ந்தார். இந்த இரட்டை அடையாளமே, புகழ்பெற்ற கலைச் சேகரிப்பாளரும் கலைகளின் ஆதரவாளருமான கார்டினல் ஸ்கிப்பியோன் போர்கீஸை 1613ஆம் ஆண்டு மினர்வா ஓவியத்தை வரைய அவருக்கு ஆணையிடத் தூண்டியது என்பதில் சந்தேகமில்லை.
ரோமில் உள்ள வில்லா போர்கீஸின் சுவர்களில் அந்த ஓவியம் முக்கிய இடத்தைப் பெற்றது. “இவ்வளவு பெரிய ஓவியத்தை மறைத்து வைக்க முடியாது. குறிப்பாக, ரோமின் மிகவும் புகழ்பெற்ற ஓவியரிடம், அந்த நகரின் மிகவும் எதிர்பார்ப்புமிக்க ஆதரவாளர் அதை வரையச் சொல்லியிருந்தபோது” என்கிறார் டால் போஸோலோ.
அந்த ஓவியத்தை, “அதை ரசிப்பார்கள் என்று அவர் நினைத்த அனைவரிடமும்” போர்கீஸ் காட்டியிருப்பார். அந்தக் காலத்தில் இந்த ஓவியத்தைக் காணும் வாய்ப்பு பெற்றவர்கள், சமூகத்தின் உயர் அடுக்குகளைச் சேர்ந்த ஆண்களாக மட்டுமே இருந்திருக்கலாம்.
ஆனால், இன்று எல்லோரும் இந்த அசாதாரணமான, எல்லைகளைத் தாண்டிய பெண்ணின் படைப்பை ரசிக்க முடியும். அவரது சுய உருவப் படத்தில் காணப்படும் புதிரான புன்னகை, அவருக்குள் எண்ணற்ற பரிமாணங்கள் மறைந்திருந்ததைத் தெளிவாக உணர்த்துகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு





