புதிய காருக்கு 3 ஆண்டு மூன்றாம் நபர் காப்பீடும், ஓராண்டு சொந்த சேத காப்பீடும் வழங்கப்படுகிறது. இரண்டாம் ஆண்டு சொந்த சேத காப்பீட்டை புதுப்பிக்கும்போது, ‘பம்பர்- – டு – -பம்பர்’ தவிர்த்து, இன்ஜின் பாதுகாப்பு, தேய்மானம் இல்லாத காப்பீடு, டயர் பாதுகாப்பு போன்ற கூடுதல் பாலிசி திட்டங்களை வாங்க நிறுவனங்கள் வற்புறுத்துவது சரியா? வழக்கமான பாலிசி புதுப்பித்தலில் இந்த வசதிகள் கிடைக்காதா? தயவு செய்து விளக்கவும்.
– ரமேஷ்குமார், சென்னை காருக்கான காப்பீட்டை புதுப்பிக்கும்போது நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு ‘ஆப்ஷன்கள்’ குழப்பத்தை ஏற்படுத்தலாம். எனவே, சிறிது நேரம் எடுத்து கொண்டு, உங்கள் பழைய பாலிசியில் உள்ள கவரேஜ்களையும், புதிய ஆபர்களையும் ஒப்பிட்டு பார்த்து முடிவெடுப்பது அவசியம்.
புதிய காருக்கு 3 ஆண்டுகள் 3ம் நபர் காப்பீடும், ஓராண்டு ‘ஓன் டேமேஜ்’ காப்பீடும் வழங்கப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்ததே ‘காம்ப்ரிஹென்சிவ்’ பாலிசி.
இதில் ‘ஓன் டேமேஜ்’ பகுதியை நீங்கள் இரண்டாம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். 3ம் நபர் பகுதியை நான்காம் ஆண்டிலிருந்து புதுப்பித்து வர வேண்டும்.
‘ஓன் டேமேஜ்’ என்பதில் விபத்தினால் ஏற்படும் கவரேஜ் மட்டுமே இருக்கும். இன்ஜின் பாதுகாப்பு, கீ புரொடக்ட், ரோடு சைடு அசிஸ்ட் போன்றவை ஆட்-ஆன் வசதிகளே.
ஆனால், வெள்ளத்தின் பின் ஸ்டார்ட் செய்வதால் இன்ஜின் பழுதாவது, சாவி தொலைவது போன்றவை விபத்து அல்ல என்பதால், அதற்கு கவரேஜ் வழக்கமாக கிடையாது. அதனால் அதிகப்படியாக எடுத்து கொள்ளலாம்.
இவற்றை ‘காம்போ’ வாக எடுக்க சொல்லி நிறுவனங்கள் வற்புறுத்தினாலும், உங்களுக்கு தேவையானதை மட்டும் கேட்டுப்பெறும் உரிமை உங்களுக்கு உண்டு.
பல ஆப்ஷன்களை திணிக்கிறார்கள், இவற்றை விட்டுவிட வாய்ப்பில்லை, விட்டால் கேஷ்லெஸ் கொடுக்க முடியாது என்கிறார்கள் என நீங்கள் கூறுவது உண்மைதான், பல கம்பெனிகள் அப்படி செய்வது பற்றி கேள்விப்படுகிறோம்.
ஓரளவுக்கு இவை விற்பனை உத்திகள். ஓரளவுக்கு இவை உங்களுக்கு உகந்த ஆப்ஷன்கள் ஆகவும் அமையக்கூடும்.
இந்த ஓன் டேமேஜ் பகுதி காப்பீட்டுக்கு நீங்கள் வேறொரு இன்சூரன்ஸ் கம்பெனியிடமும் போகலாம்.
ஆன்லைன் தளங்களில் விலையை சரி பார்த்துவிட்டு, உங்கள் தற்போதைய நிறுவனத்திடமே பேசி விலையை குறைக்கவோ அல்லது தேவையான கவரேஜ்களை பெறவோ முடியும். பழைய வாடிக்கையாளர் என்பதால் அவர்கள் மாற்றி தர வாய்ப்புள்ளது.
கடந்த மே 2015ல், ‘ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்’ வங்கியில் பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்தேன். ‘பஞ்சாப் நேஷனல் வங்கி’யுடன் இவ்வங்கி இணைந்த பிறகு, இத்திட்டத்திற்கான பிரீமியம் பிடித்தம் குறித்து நான் கேட்டபோது, தற்போது 20 ரூபாய் பிடிக்கப்படும்; கூடுதல் பலன்கள் கிட்டும் என்றார்கள்.
கடந்த 19 பிப்ரவரி 2024 அன்று எனக்கு நேரிட்ட விபத்தில் எனது இடது கால் முட்டிக்கு மேலே நீக்கப்பட்டது. இது குறித்து காப்பீடு கோரி வங்கியை அணுகியபோது, எனது பெயர் காப்பீட்டு பட்டியலில் இல்லை என்று வங்கி மறுக்கிறது.
பழைய வங்கி புத்தகத்தில் காப்பீடு பிடித்ததற்கான ஆதாரங்கள் இருந்தும், அதை நாங்கள் டிஸ்போஸ் செய்து விட்டோம் என்று பதிலளிக்கிறார்கள். இது குறித்து வங்கி மேலாளர் மற்றும் மண்டல மேலாளர்களுக்கு புகார் அனுப்பியும் பதிலில்லை எனவே ஆர்.பி.ஐ.,க்கு புகார் அனுப்பினேன் பதிலில்லை. அடுத்து இந்த விபத்து காப்பீடை பெற என்ன செய்ய வேண்டும்?
– சதீஷ், விழுப்புரம் இன்றைய கம்ப்யூட்டர், இன்டர்நெட் ஆகிய வசதிகள் வைத்து வங்கி கணக்கு பராமரிப்பு செய்யும் காலத்தில், ஒரு வங்கி உங்களுடைய எல்லா பழைய விபரங்களையும் அழித்துவிட்டோம் என்று கூறுவது ஏற்க தகுந்ததாக இல்லை.
அவர்களை பழைய கணக்கை கண்டுபிடித்து தருமாறு எழுத்து வாயிலாக கேட்க உங்களுக்கு உரிமை உள்ளது. அவர்களிடம் ஒரு பதில் எதிர்பார்க்க உங்களுக்கு உரிமை உள்ளது.
உங்கள் வங்கி உங்களது பழைய பாஸ்புக்கை வாங்கி வைத்து கொண்டு புதிய வங்கி பெயர் போட்ட பாஸ் புக்கை கொடுத்ததாக கூறுகிறீர்கள். அந்த பழைய பாஸ்புக்கின் போட்டோ காப்பி ஏதாவது கிடைக்குமா?
இல்லையென்றால் புதிய வங்கி, அதாவது ‘பஞ்சாப் நேஷனல் பேங்க்’ கிளை மேலாளருக்கு உங்கள் பழைய ‘ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்’ அக்கவுன்ட் நம்பரை குறிப்பிட்டு நீங்கள் இங்கே கொடுத்திருக்கும் விபரங்கள் அனைத்தையும் ஒரு கடிதமாக எழுதுங்கள்.
பஞ்சாப் நேஷனல் பேங்க் பாஸ்புக்கில் அந்த இருபது ரூபாய் பிடித்ததற்கான ஏதாவது குறிப்பு இருந்தால் அதையும் ஒரு போட்டோ காப்பி எடுத்து அனுப்புங்கள்.
அது உங்களுக்கு மிகவும் உதவும். ‘அக்னாலேஜ்மென்ட் டியு’ முறையில் இந்த கடிதத்தை வங்கி கிளைக்கு அனுப்புங்கள்.
இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் உங்களுக்கு பதில் வரவில்லை என்றால் அதே வங்கியின் டிவிஷனல் ஆபீஸ், ரீஜனல் ஆபீஸ் அல்லது ஹெட் ஆபீசுக்கு கூட கடிதம் எழுதலாம்.
இதற்கு மேற்படியாக, பேங்கிங் ஆம்பட்ஸ்மேன் என்ற வங்கித் துறை பற்றிய முறையீடுகளை வாடிக்கையாளர்கள் சார்பாக ஆராய்ந்து தீர்ப்பளிக்கும் அமைப்புக்கு புகார் கடிதம் எழுதலாம். உங்கள் முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
ஒரு வருந்ததக்க நிலைமைக்கு தள்ளப்படும் போது ‘ஏற்கனவே செய்திருக்கலாமே’ என்று அறிவுரை கூறுவது கசப்பாக இருக்கலாம், ஆனால் இது உண்மை.
நமது ஆவணங்களை, பாஸ்புக் அல்லது வேறு பல காகிதங்களை, நாம் கவனமாக எடுத்து வைத்து கொள்வது முக்கியம். “நீங்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் இல்லவே இல்லை,” என்று கூறும்போது, “இல்லையே நீங்கள் பிரீமியம் பிடித்திருக்கிறீர்களே,” என்று சுட்டிக் காட்ட முடியும்.
