அமராவதி: ஆந்திராவில், ‘ஸ்லீப்பர்’ எனப்படும் படுக்கை வசதி கொண்ட தனியார் ஆம்னி பஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து அம்மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் – ஜனசேனா – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி, உள்துறை அமைச்சர் வங்காலபுடி அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், சாலை பாதுகாப்பு மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அப்போது, லாரி போன்ற சரக்கு வாகனங்களின், ‘சேஸிஸ்’ எனப்படும் அடிப்பகுதியை வாங்கி, அதன் மேல் சட்டவிரோதமாக பஸ் கூண்டு கட்டி, ஸ்லீப்பர் பஸ்களாக இயக்கி வந்ததாக அதிகாரிகள் விளக்கினர். முறையான பாதுகாப்பு விதிகளின்படி கட்டப்படாத இந்த பஸ்களில், வெளியேறுவதற்கான அவசர வழிகள் இருப்பதில்லை. மேலும், தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்பதால், ஆந்திர அரசு இந்த பஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, போக்குவரத்து அமைச்சர் மண்டிபள்ளி ராம்பிரசாத் ரெட்டி கூறுகையில், ”முதற்கட்டமாக, சட்டவிரோதமாக கூண்டு கட்டப்பட்ட தனியார், ‘ஸ்லீப்பர்’ பஸ்களுக்கு தடை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். பயணியரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத இத்தகைய பஸ்களை முழுமையாக தடை செய்வதா அல்லது கட்டுப்பாடு விதிப்பதா என்பது குறித்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
தடை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாவிட்டாலும், ஆந்திர அரசு கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த துவங்கி இருக்கிறது. அதன்படி, 300 கி.மீ., துாரத்திற்கு மேல் இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்களில், இரு டிரைவர்கள் இருக்க வேண்டும் என, புதிய விதி வகுத்துள்ளது. மாநிலத்தின் முக்கிய சாலைகளில் அதிவேகத்தை கண்டறியும், ‘ஸ்பீடு கன்’ பொருத்த அரசு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
தனியார் பஸ்களில் டிரைவர் விழிப்புடன் இருக்கிறாரா, பஸ்ஸின் வேகம் மற்றும் எதிரே வரும் வாகனங்கள் ஆகியவற்றை கண்டறிய, தனித்தனியாக இரு கேமராக்கள் பொருத்தவும் மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கண்காணித்து, அபராதம் விதிக்க தொழில்நுட்ப ரீதியிலான நடவடிக்கைகளையும் அரசு முடுக்கிவிட்டுள்ளது.
