ஆந்திராவில் போலீசாரால் கீழே தள்ளப்பட்ட முன்னாள் அமைச்சர்! வைரல் வீடியோ – former andhra pradesh minister vidadala rajini allegedly pushed down by police viral video

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (YSRCP) கட்சியின் முக்கிய பெண் தலைவருமான விடதலா ரஜினி, பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரால் நடுரோட்டில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி என்ன?

சிலகலூரிப்பேட்டையில் உள்ள விடதலா ரஜினியின் வீட்டைச் சுற்றி கடந்த மூன்று நாட்களாகவே போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அவர் மறைமுக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (அக்டோபர் 23, 2026) யாட்லபாடு மாவட்ட கவுன்சில் (ZPTC) தேர்தலுக்கான ஒய்.எஸ்.ஆர்.சி.பி வேட்பாளர் பந்துலா புல்லாபாய், கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் படிவங்களை (B-Forms) வாங்குவதற்காக ரஜினியின் வீட்டிற்கு வந்துள்ளார்.

ஆனால், வேட்பாளரை வீட்டிற்குள் நுழைய விடாமல் வாசலிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். தகவலறிந்து வேட்பாளருக்கு ஆதரவாக வீட்டை விட்டு வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ரஜினி, போலீசாரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நடுரோட்டில் நடந்த தாக்குதல்

வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிலகலூரிப்பேட்டை ரூரல் சப்-இன்ஸ்பெக்டர் (SI) பிரியங்கா, முன்னாள் அமைச்சர் என்றும் பாராமல் விடதலா ரஜினியை மிகவும் ஆக்ரோஷமாகப் பிடித்து பின்னோக்கித் தள்ளியுள்ளார். இதில் நிலைதடுமாறிய ரஜினி நடுரோட்டில் கீழே விழுந்தார்.

அருகில் இருந்த கூர்மையான கல்லின் மீது அவர் விழும் அளவுக்கு போலீஸ் அதிகாரி கொடூரமாக நடந்து கொண்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், விடதலா ரஜினியின் காரில் அமர்ந்திருந்த அவரது தனி உதவியாளர் (PA) ஸ்ரீகாந்த் ரெட்டியை, ரூரல் இன்ஸ்பெக்டர் சுப்பராயுடு தலைமையிலான போலீசார் வலுக்கட்டாயமாக காரில் இருந்து இழுத்துச் சென்று கைது செய்தனர்.

அரசியல் உள்நோக்கமா? – ஒய்.எஸ்.ஆர்.சி.பி கொந்தளிப்பு

இந்தக் கொடூரத் தாக்குதல் மற்றும் கைது சம்பவத்தின் வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. தற்போதைய ஆளும் அரசு, காவல்துறையைத் தனது ஏவல்துறையாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பார்ப்பதாக ஒய்.எஸ்.ஆர்.சி.பி தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
“ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் தலைவர என்றும் பாராமல், முன்னாள் அமைச்சரை இப்படி மிருகத்தனமாக நடத்துவதுதான் ஆந்திராவின் தற்போதைய ஜனநாயகமா?” என அக்கட்சியின் தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் சிலகலூரிப்பேட்டை பகுதியில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது.

Source link