ஆன்மீகம் என்றால் என்ன? அதை கடைபிடிப்பதால் என்ன கிடைக்கும்? விளக்குகிறார் டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர்

பக்தி மார்க்கத்தை குறிக்கும் பொதுவான சொல்லாக ஆன்மீகம் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் ஆன்மீகம் என்பது என்ன? அதை எதற்காக கடைபிடிக்க வேண்டும் என்பது பற்றிய விளக்கங்கள் பெரும்பாலானவர்களுக்கு தெரிவது கிடையாது. ஆன்மீகம் பற்றியும், அதை கடைபிடிப்பதால் மனிதனுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்தும் விளக்கி சொல்கிறார் சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர் அவர்கள்.

ஆன்மீகம் என்றால் என்ன?

ஆன்மிகம் என்பது மனித வாழ்வின் அர்த்தம், நோக்கம் மற்றும் “நான் யார்?” என்ற உள்நோக்கிய தேடலைக் குறிப்பதாகும். இது உடலையும், பொருளையும் கடந்த ஒரு உயர்ந்த நிலை அல்லது அகத் தன்மையைக் கண்டறியும் அனுபவமாகும் என ஈஷா யோக மைய நிறுவன தலைவர் சத்குரு குறிப்பிடுகிறார். ஆன்மீகம் என்பது மதம் சம்பந்தப்பட்டது என பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில், ஆன்மீகம் வேறு; மதம் என்பது வேறு. மதம் என்பது வரையறுக்கப்பட்ட சடங்குகள், கோட்பாடுகள் மற்றும் அமைப்புகளைக் கொண்டது. ஆனால், ஆன்மிகம் என்பது மத எல்லைகளையும் தாண்டி, ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த அனுபவத்தின் மூலம் அடையக்கூடிய அகப்பயணம் ஆகும்.

ஆன்மீகத்தை ஏன் கடைபிடிக்க வேண்டும் ?

ஆன்மீகம் என்பது உள்ளார்ந்த உயிராகிய ஆத்மாவிற்கு உயர்ந்த சக்தியான பரமாத்மாவுடனான உறவை உணர்த்துவதே. இது மதம், சமயம், வழிபாடு ஆகியவற்றை தாண்டி, உள்ளார்ந்த அமைதி, கருணை, தியானம், தானம் போன்றவற்றை வளர்க்கும் பாதையாகும். ஆன்மீகத்தின் முக்கிய அம்சமாக சொல்லப்படுபவை தியானம், மனஅமைதி, கவலையை குறைப்பது. மந்திர ஜபம், மனதில் சக்தி, நம்பிக்கை, ஆனந்தம் ஆகியவற்றை அளித்து, மன அழுத்தத்தை குறைக்கக் கூடியதாகும். கர்ம பலனை குறைத்து, தெய்வீக அருளை தர வல்லது.பக்தி என்பது இறைவனுடன் உள்ளார்ந்த இணைவு. அறிவு, வாழ்க்கையின் உண்மையை அறிதல். ஆன்மீகத்தை தொடர்ந்து பற்றி இருப்பதால் மன அழுத்தம் குறையும். வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமை, கருணை அதிகரிக்கும். உறவுகள் இனிமை பெறும். சுய உணர்வு ஏற்படும்.

தினமும் கடைபிடிக்க வேண்டிய எளிய ஆன்மீக நடைமுறைகள்:

– காலையில் எழுந்த உடன் 5 முதல் 10 நிமிடங்களாவது தியானம் செய்வது.

– ஓம் நமோ நாராயணா அல்லது ஓம் நம சிவாய மந்திரங்களை ஜபம் செய்யலாம்.

– வாரத்திற்கு ஒரு நாளாவது உணவு, ஆடை என தங்களால் முடிந்தவற்றை தானம் செய்யலாம்.

– இயற்கையுடன் நேரம் செலவிடுதல்.

இவை ஆன்மீகத்தின் அடிப்படை கோட்பாடுகளாகும். என்ன ஜாதி, என்ன மதமாக இருந்தாலும் அது முக்கியம் கிடையாது. நம்முடைய மனது கோபப்படாமல் சாந்தமாக இருக்க வேண்டும். பலர் நம்மை திட்டவும் செய்வார்கள், வாழ்த்தவும் செய்வார்கள். வாழ்த்துக்கும் நாம் அடி பணியக் கூடாது. திட்டுவதற்கு கோபமும் படக் கூடாது. எப்போதும் நடுநிலையோடு இருக்க வேண்டும். அப்படி மனம் எப்போதும் நடுநிலையோடு இருப்பதற்கு தேவையானது தான் தியானம்.

தியானத்தை எப்படி பயிற்சி செய்யலாம்?

அமைதியாக கண்களை மூடி நமக்கு யாரைப் பிடிக்குமோ அவரை மனதில் நிறுத்த வேண்டும். தெய்வங்களை மட்டுமல்ல. யார் ஒருவரை பிடிக்குமோ, யார் ஒருவர் நம்மை கவர்ந்தவர்களோ, யாரை போல் வாழ வேண்டும் என நினைக்கிறோமோ அவர்களை மனதில் நினைத்து 5 முதல் 10 நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து 21 நாட்கள் நாம் செய்தால் அது நம்முடைய ஆழ்மனதில் பதிந்து விடும். 21 நாட்கள் தொடர்ந்து ஒரு விஷயத்தை நாம் செய்ய முயற்சி எடுக்கும் போது தடங்கல் வரும். அந்த தடைகளை தாண்டி, தொடர்ந்து விடாப்பிடியாக அதை செய்பவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும். அப்படி 21 நாட்கள் தொடர்ந்து தியானம் செய்து பழகி விட்டோம் என்றால், 22வது நாள் நம்மையும் அறியாமல் அந்த நேரத்தில் தியானத்தில் அமர்ந்து விடுவோம். 21 நாள் என்பது மூளைக்கு நாம் கொடுக்கும் பயிற்சி. தியானம் செய்ய வேண்டும் என நினைத்து, அதற்கான முயற்சியில் இறங்கினால் 2 நாட்களுக்கு பிறகு மூளை அதை வேண்டாம் என நினைக்கும். ஆனால் அதை தோற்கடித்து, தொடர்ந்து தியானம் செய்ய துவங்கினால் மூளையை தோற்கடித்து, அதை உங்களின் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். அது நல்ல சிந்தனைகளை வளர்க்கும்.

– கட்டுரையை வழங்கியவர்

டாக்டர் ஸ்ரீரங்கத்து கோவிந்த பட்டர்,

சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர்.

மொபைல் எண்: 9087426655

Source link