முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு 6 மாதங்களை நிறைவு செய்யயுள்ள நிலையில், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனை என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருவதை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீடியோ வெளியிட்டுப் பேசியதாவது:வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. தீபாவளி அடுத்த வாரம் வருகிறது. புயல் மையம் கொண்டு ஆந்திராவில் கரையைக் கடக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது.இதில் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றியெரிகிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தெக்கம்பட்டி அருகே உள்ள சிறையில் போலீசாரைத் தாக்கி, மண்டையை உடைத்து 17 கைதிகள் தப்பியிருக்கிறார்கள். புழல் சிறையில் ஒரு வாரத்துக்கு முன்பு இரண்டு பேர் தப்பித்துச் சென்றார்கள். பின்னர் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.
கைதிகள் தப்பியோடிய விவகாரம்
தெய்வீகத் திருமகனார்பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஆகியோருக்கு வீர வணக்கம் செலுத்துவதற்காக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் என அனைவரும் அஞ்சலி செலுத்துகின்ற இந்த நிலையில், தேனி மாவட்டத்திலிருந்து 17 கைதிகள் தப்பித்திருப்பது அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதெல்லாம் நமக்கு எதை ஞாபகப்படுத்துகிறது என்றால், ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, உகாண்டாவில் இதுபோன்று அடிக்கடி நடக்கும். சமீபத்தில்கூட மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டின் மேம்போ நகரச் சிறையிலிருந்து 130 கைதிகள் தப்பிச் சென்றதாகச் செய்தி வெளியானது.
தமிழ்நாடும் குற்றவாளிகளின் நாடாக மாறிடுமா?
விஜய் வந்தால் தமிழ்நாடு அமெரிக்காவைப் போல வல்லரசு நாடாகும் என்று எல்லோரும் கனவு கண்டார்கள். அவரிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்போது வல்லரசு ஆகாவிட்டாலும் பரவாயில்லை; தமிழ்நாடு ஆப்பிரிக்காவைப் போன்ற பின்தங்கிய, மோசமான குற்றவாளிகளின் நாடாக மாறிவிடுமோ என்ற கவலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. அதைத்தான் அரசின் கவனத்துக்குச் சொல்கிறோம்.
தற்போதுகூட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகக் காவல் உதவி கிடைக்கும் வகையில், முதல்வர் விஜய் கடந்த ஜூன் 9ஆம் தேதி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைத்தார்.
நாங்கள் இவ்வளவு பேரைக் காப்பாற்றியிருக்கிறோம், இவ்வளவு பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம், இவ்வளவு பேருக்குக் காவல் உதவி செய்திருக்கிறோம் என்று அறிக்கை கொடுக்கலாம். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. காவல்துறை செய்த அந்தப் பணிகளைச் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சமின்றி நடமாடுவதற்காக சிங்கப்பெண் படை அமைக்கப்பட்ட பிறகும், தமிழ்நாட்டில் அச்சமின்றி நடமாடும் நிலை தவெக அரசில் தற்போது வரை இன்னும் உருவாகவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இதை மனசாட்சி உள்ள யாருமே மறுக்க முடியாது. கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தவெக அரசு தடுமாறிக்கொண்டிருக்கிறது.
ஜால்ரா போடுகிறவர்கள், துதி பாடுகிறவர்கள், அரசில் பலன் அடைகிறவர்கள், விஜயை இந்திரன், சந்திரன், அசோகச் சக்கரவர்த்தி எனப் பல்வேறு வகைகளில் துதிபாடுகிறவர்கள், அதனால் பொற்கிழி பெறுகிறவர்கள் உண்மை நிலையை மறைத்துச் சொல்வதை எதார்த்தக் கள நிலவரமாக எடுத்துக்கொள்ள முடியாது.
குற்ற உணர்வு முதல்வருக்கு இருக்கிறதா?
அரசின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டிய தார்மீகக் கடமையிலும், மக்கள் மீதுள்ள அக்கறையிலும்தான் இதைச் சொல்கிறோம்.
தினந்தோறும் கொலை, கொள்ளை, அரிவாளால் வெட்டுவது, கத்திக்குத்து, போதைப்பொருள் கடத்தல் ஆகியவை நடந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் இவை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரே நாளில் இதெல்லாம் நடக்காது என்று சொல்லலாம். கடந்த காலங்களில் இருந்த குற்றச்சாட்டுகளைச் சொல்லித்தான் முதல்வர் ஆட்சிக்கு வந்தார். அந்தக் குற்ற உணர்வு முதல்வருக்கு இருக்கிறதா?
குற்றச் சம்பவங்கள் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகின்றன என்ற குற்ற உணர்ச்சி இந்த அரசுக்கு வந்தால்தான், முதல்வர் அதைக் கருத்தில் கொண்டால்தான் இதற்குத் தீர்வு காண முடியும். இல்லையென்றால் நாடு என்ன நிலைக்குச் செல்லும் என்று யாரும் உத்தரவாதம் தர முடியாது.
இதில் பெரிய கொடுமை என்னவென்றால், தவெக அரசு வேண்டும் என்று வாக்களித்த மக்களுக்கு, தவெக நிர்வாகிகளே போதைப்பொருள் கடத்துவது, பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது, பெண்களை ஏமாற்றுவது போன்ற அவலமான நிலை உள்ளது. நடவடிக்கை எடுப்போம் என்று கூறுகிறார்கள். ஆனால், இதையெல்லாம் செய்துமுடித்த பிறகுதான் அவர்களை நீக்குகிறார்கள்.
தவெக ஆட்சி அமைந்தவுடன் போதைப்பொருள் நெட்வொர்க்
சமீபத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருந்ததாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி பூபாலனும் அவருடைய கூட்டாளிகள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டார்கள். இவர்களை மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்தான் கைது செய்தார்கள். அப்போது அரசு கைகட்டிக் வேடிக்கை பார்த்தது.
இதற்கு ஆதரவாக இருந்தீர்களா? ஒத்தாசை செய்தீர்களா? துணையாக இருந்தீர்களா? என்பது விசாரணையில் தெரியும்.
தவெக ஆட்சி அமைந்தவுடன் போதைப்பொருள் நெட்வொர்க்கை ஒழித்துக்கட்டுவோம் என்று போதைப்பொருள் சிறப்பு அதிரடிப்படையை அமைத்தீர்கள். 100 நாட்களாக அந்தச் சிறப்பு அதிரடிப்படை எங்கே தூங்கிக்கொண்டிருக்கிறது?
இந்தக் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது யாருடைய பொறுப்பு? குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது யாருடைய பொறுப்பு? காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் விஜய்தானே பொறுப்பு?
சினிமாவில் அதிரடி காட்டி, குற்றவாளிகளை எல்லாம் கிளைமாக்ஸில் அடித்து நொறுக்குவாரா? அதுபோன்ற கிளைமாக்ஸ் வரும்வரை காத்திருக்க வேண்டுமா? அது நிழல்; இது நிஜம்.நிஜத்தில் நீங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதுதான் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.
ஆகவே, காவல்துறையைக் கையில் வைத்துள்ள முதல்வர் தனது தலையாய கடமையிலிருந்து விலகி நிற்பதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய மிகப்பெரிய கவலையாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தலைவிரித்தாடி தமிழ்நாட்டில் பற்றியெரிகின்றன.
ஆனால், இதுகுறித்து ஒரு ஆய்வுக் கூட்டம்கூட டிஜிபி தலைமையில் நடைபெற்றதாகச் செய்தி வரவில்லை.முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மக்களைக் காக்க முன்வருவாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
