ஆமதாபாத்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் இந்தத் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து சூப்பர் 8 சுற்று போட்டிகள் நேற்று (பிப்ரவரி 21) முதல் துவங்கியுள்ளன. இன்றைய முக்கிய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், கடந்த முறை பைனலில் தோற்ற தென் ஆப்ரிக்காவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான, ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கிறது.
லீக் சுற்றில் வெவ்வேறு பிரிவுகளில் இடம்பெற்றிருந்த இரு அணிகளும் இதுவரையில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை. எனவே, வெற்றியை தொடர்ந்து தக்க வைக்கப்போவது யார்? என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் இன்றைய ஆட்டத்தில் ரசிகர்களிடம் அதிகம் மேலோங்கியுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் பைனலில் இந்த இரு அணிகள் தான் மோதின. கடைசி பந்து வரை த்ரில்லாக இருந்த ஆட்டத்தில், 7 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று மகுடம் சூடியது. எனவே, அந்தத் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்ரிக்கா இன்று விளையாடும்.
டி20 உலகக்கோப்பை அரங்கில் இரு அணிகளும் தலா 7 முறை மோதியுள்ளன. அதில், இந்தியா 5 முறையும், தென் ஆப்ரிக்கா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சர்வதேச டி20 அரங்கில் 35 முறை மோதின. இந்தியா 21 முறையும், தென் ஆப்ரிக்கா 13 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
இது ஒருபக்கம் இருக்க கடந்த 2024ம் ஆண்டு உலகக்கோப்பை பைனலில் இருந்து, 12 டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, தென் ஆப்ரிக்கா அணி 13 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. அதுவும் 2024 டி20 உலகக்கோப்பை போட்டியின் பைனலில் இந்தியாவுக்கு எதிராகத் தான்.
எனவே, இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை தொடரும் என்று ரசிகர்கள் பெரிதும் நம்பியுள்ளனர்.
